Breaking
Fri. Nov 22nd, 2024

-சுஐப் எம்.காசிம் –

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சேவைகள் மற்றும் முதலீடுகளை பரிவர்த்தனை செய்யும் வகையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எட்கா (ETCA) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அழுத்தங்களுமின்றி காலவரையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று, இறுதிக்கட்டத்துக்கு வரவேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக, அந்நாட்டின் கைத்தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய உயர்மட்டக்குழுவுடன் இங்கு வந்துள்ள இந்திய இணையமைச்சர், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இலங்கை அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, றிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா, அஜித் பெரேரா ஆகியோருடன் இணைந்து இன்று மாலை (27/09/2016) கூட்டுப் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் அவர் கூறியதாவது,

எட்கா பேச்சுவார்த்தை தொடர்பில் மேலும் பேச்சு நடத்த ஒக்டோபர் முதல் வாரத்தில் தனது நாட்டிலிருந்து உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே அமுலில் இருக்கும் சுதந்திர வர்த்தக உடன்பாடு (FTA) தொடர்பில் இரு நாடுகளைச் சேர்ந்த   வர்த்தகர்களுக்கும் பிரச்சினை இருப்பதாகவும், இலங்கை வர்த்தகர்கள் பலர் இந்தியாவிடம் இந்தக் குறைபாடுகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருப்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

தற்போது நடைமுறையில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு இலங்கைக்கு ஒப்பீட்டளவில் நன்மை பயக்கின்றது எனவும் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், எட்கா உடன்பாடு கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படுமென அவர் தெரிவித்தார். தாம் இலங்கைக்கு வந்த பின்னர், இரண்டு நாடுகளுக்கிமிடையிலான வர்த்தக உறவுகள் குறித்து ஆக்கபூர்வமான, விரிவான பேச்சுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல்வேறு அரச முக்கியஸ்தர்களுடன் நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அயல் நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த வேண்டுமென்ற கொள்கையுடனேயே செயலாற்றி வருவதாகவும், அந்தவகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை, மேலும் வலுப்படுத்த இந்தியா கரிசனையுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஒக்டோபர் மாதம்    05 ஆம் திகதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், இலங்கை – இந்திய பொருளாதார வர்த்தக உறவுகள் மேலும் விரிவடைய இரு நாடுகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்குமெனவும்  நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை திருமலையில் எண்ணெய்க் குதங்களை சுத்திகரிப்பது  தொடர்பில், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேச்சுநடத்தவே இலங்கை அமைச்சர், இந்தியா வருவதாக அங்கு வருகை தந்திருந்த இந்திய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

14518628_651305608368821_355587805_n 14502120_651305535035495_661023274_n

 

By

Related Post