-சுஐப் எம்.காசிம், அஷ்ரப் ஏ சமத் –
“நுரைச்சோலை” – நமக்கு உடன் ஞாபகத்துக்கு வருவது புத்தளம் அனல்மின் நிலையமே. இற்றைக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை மக்களின் பேசுபொருளாக அம்பாறையில் அமைந்துள்ள நுரைச்சோலை இருந்தது.
200௪பூ டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய சுனாமிப் பேரழிவு பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், பல பில்லியன் பெறுமதியான சொத்துக்களையும், வீடுகளையும் அழித்தது. “சுனாமி” எனும் கடற்பேரலை அம்பாறைக் கரையோரப் பிரதேசங்களிலும் தனது மூர்க்கத்தனத்தைக் காட்டியது.
கொடூரமான இந்த கடற்பேரலையினால் வீடுகளை இழந்த அம்பாறைக் கரையோரப் பிரதேச மக்கள் படுகின்ற கஷ்டங்களை சவூதி அரேபிய அரசிடம் அப்போது இலங்கை அரசில் அமைச்சராக இருந்த திருமதி.பேரியல் அஷ்ரப் எடுத்துச்சொன்னதன் விளைவாக நமக்குக் கிடைக்கப் பெற்றதே நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம்.
நுரைச்சோலை ஒலுவிலிலிருந்து தென்கிழக்கே பத்து கிலோமீற்றர் தூரத்தே அமைந்துள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து அம்பாறை நகரத்துக்குச் செல்லும் நேர்பாதையில் இருக்கும் இந்த நுரைச்சோலையில் சவூதி அரசு 500 வீடுகளை அமைத்துக்கொடுத்தது. King Hussain Model Village (கிங் ஹுசைன் மொடல் வில்லேஜ்) என்ற பெயரிலான இந்த அழகான மாதிரிக் கிராமத்தில் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குச் சொந்தமான 50 ஏக்கர் பரப்பு விஸ்தீரணம் கொண்ட இந்தக் காணியில் பள்ளிவாசல், விளையாட்டு மைதானம், வாசிகசாலை, பொதுமண்டபம் மற்றும் இன்னோரன்ன வசதிகளும் அமையப்பெற்றுள்ளன.
வருடாவருடம் சவூதி மன்னரின் விசேட விருந்தாளிகளாக உலக அரசியல் தலைவர்கள் உம்ரா செல்வது வழமை. அந்தவகையில் மன்னரின் விருந்தாளியாக மர்ஹூம் அஷ்ரப் உம்ரா கடமையில் ஈடுபடும் வாய்ப்பைக் கொண்டிருந்தார். அவரது மறைவின் பின்னர் திருமதி. பேரியல் அஷ்ரப் சவூதி மன்னரின் விருந்தாளியாக மக்காவுக்கு உம்ராக் கடமைக்குச் சென்றிருந்தார். சுனாமியின் தாக்கத்தின் பின்னர் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது. உம்ராக் கடமையை நிறைவேற்றிய உலகத் தலைவர்களை சவூதி மன்னர் சந்திப்பது வழக்கம். அந்தவகையில் மன்னரின் மாளிகைக்கு உம்ராக் கடமைக்குச் சென்ற திருமதி.பேரியல் அஷ்ரப் அங்கு பிரசன்னமாகி இருந்த மன்னரின் சகோதரரும், இஸ்லாமிய விவகாரங்களுக்கும், தர்ம நம்பிக்கை நிதிக்கும் பொறுப்பான அமைச்சர் மன்னர் ஹைப் அவர்களை சந்தித்து, சுனாமி அவலங்களை விபரித்தார்.
அம்பாறை மக்கள் பட்ட துன்பங்களை காணொளிகள் மூலம் திருமதி.பேரியல் விளக்கியபோது மன்னர் ஹைப் மனம் வெதும்பினார். இந்தோனேசிய நாட்டுக்கு செல்லவிருந்த சுனாமி வீடமைப்புத் திட்டத்தை இலங்கையின் அம்பாறைக்கே தருவதாக வாக்களித்தார். அவர் இலங்கை திரும்பிய பின்னர் சவூதி அரேபியத் தூதரகத்துடன் வீடமைப்புத் திட்ட பணிகள் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டு நுரைச்சோலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டிய தினம் அன்றே இந்த வீடமைப்புத் திட்டத்தை எதிர்க்கும் முயற்சிகள் முளைவிடத் தொடங்கின. சவூதி அரேபியாவின் கொடி எரிக்கப்பட்டது. எனினும் பேரியலின் அயராத முயற்சியினால் வீட்டுத்திட்டம் பூர்த்தியாகி பயனாளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வீடமைப்புத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கவிடாது பேரினவாதிகள் பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டனர்.
சுனாமியில் எந்தவகையிலும் பாதிக்கப்படாத அம்பாறை சிங்கள சகோதரர்களுக்கும் இந்த வீடமைப்புத் திட்டத்தில் பங்கு வேண்டுமென்று இனவாதிகள் கோஷம் எழுப்பினர். நுரைச்சோலை தீகவாபிக்கு அருகே இருப்பதால் பெளத்தர்களின் கலாசாரம் பாதிக்கப்படும் என்றும், எனவே இனரீதியான சமநிலை பேணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. எனினும் சவூதி – இலங்கை வீடமைப்புத் திட்ட ஒப்பந்த சரத்துக்கு மாற்றமாக தளர்வுப் போக்கொன்றை கடைப்பிடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, சிங்கள சகோதரர்களுக்கு பத்து சதவீதம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. எனினும் பேரினவாதிகள் இந்தப் பிர்ச்சினையை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றதினால் பிரச்சினை சிக்கல் அடைந்தது.
ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலம் முடிந்து மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்தார். ஜனாதிபதி மஹிந்தவிடம் இந்தத் திட்டத்தை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு எத்தனையோ தடவைகள் முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விட்டபோதும் இதற்குத் தீர்வுகாணாது கிடப்பிலேயே போட்டார்.
இலங்கையில் நடைபெற்ற வீடமைப்பு இழுபறிகள் எதையுமே நன்கொடையாளரான சவூதி அரேபியாவுக்கு தெரியாத ஒன்றாகவே இருந்தது. ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இந்த வீடமைப்புத்திட்டத்தை இலங்கையிடம் கையளிப்பதற்கென சவூதியில் இருந்து இலங்கைக்கு வந்த Mr.Amer M Aimlek தலைமையிலான சவூதி அரேபிய உயர்மட்டக் குழு ஒன்று இலங்கை வந்தபோது, அந்தக் குழுவை நுரைச்சோலைக்கு செல்லவிடாது அலரி மாளிகையில் வைத்தே வீடுகளைக் கையளிக்கும் ஓர் அங்குரார்ப்பண விழாவை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்தது. மூடிய அறைக்குள் நுரைச்சொலையை ஒத்த மாதிரி வீட்டு வடிவம் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த, மற்றும் முக்கிய அமைச்சர்கள், சவூதி அரேபிய உயர்மட்டக்குழு பங்கேற்ற கையளிப்பு நிகழ்வொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு இலங்கை மக்களுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. சவூதி அரேபியாவின் அரப் நியூஸ் என்ற பத்திரிகையில் இது தொடர்பான படங்களும், செய்திகளும் வந்த பின்னரே எல்லோரும் விழித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் எவருக்கும் பயனின்றி வெறுமனே மூடிக்கிடக்கின்றன. காடுகளும், புதர்களும் தாரளமாக வளர்ந்துள்ளன. வீடற்றோர் இன்னும் கஷ்டங்களிலேயே வாழ்க்கை நடாத்துகின்றனர்.
மக்களின் இந்த அவல நிலையை கருத்திற்கொண்டே ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த வீட்டுத்திட்டத்தை பயனாளிகளிடம் வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் பேச்சு நடத்தியுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் ஜானதிபதியிடம் இந்தக் கோரிக்கையை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்வைத்தார்.
வீட்டுத்திட்டத்தை வெகுவிரைவில் திறந்துவைக்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களிடம் உறுதியளித்து அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
காடுமண்டிக் கிடக்கும் இந்தக் கிராமத்தை புதுப்பொலிவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கச் செய்வதே இன்றைய அவசரத் தேவையாகும்.