சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக்கும் திட்டம் மிக மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அது பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பு உஷாரடைந்து விடாமல் இருப்பதற்காக திட்டங்கள் மிகமிக கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நகர்வு தொடர்பான அனைத்துத் தொடர்புகளுக்கும் செய்மதித் தொலைபேசிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. செய்மதித் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது கடினமானது என்பதால் அரச புலனாய்வாளர்களை ஏய்ப்பதற்கு இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிரணி வேட்பாளர் தெரிவில் முக்கிய பங்கை வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவே இந்த இரகசியம் பேணும் நகர்விலும் முன்னின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசை ஏய்ப்பதற்காக வேட்பாளர் தெரிவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில், கருஜெயசூரிய ஆகியோரின் பெயர்களும் அவர்கள் இல்லாதவிடத்து சோபித தேரர், அர்ஜீன ரணதுங்கவின் பெயர்களும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.
மைத்திரி பாலவை இணங்க வைப்பதற்கான பேரம் பேசல்கள் கச்சிதமாக திரைமறைவில் நடந்தேறின. நகர்வுகளில் சந்திரிகா நேரடியாகப் பங்குபற்றினாலும் சந்திரிகாவுக்கும் ராஜிதவுக்கும் இடையில் தூதராக ராஜித சேனாரட்ணவே செயற்பட்டார்.
சந்திப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்ட அமைச்சர்களின் வாகனங்களின் இலக்கத்தகடுகள் அடிக்கடி மாற்றப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைக் கனகச்சிதமாக முன்னெடுத்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கே சவால்விடும் வகையில் இந்த இரகசிய நடவடிக்கையை சந்திரிகா உள்ளிட்ட எதிரணி சிறப்பாக செயற்பட்டதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் வியக்கின்றன.