Breaking
Sat. Dec 28th, 2024

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு தனிக்குடும்பமும் நாட்டை கட்டியாள அரசாங்கம் இடமளிக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனவரி 08 ஆம் திகதி தேர்தலின் மூலம் கிடைத்த திருப்புமுனை குறித்து பேரதிர்ச்சி க்குள்ளாகியிருக்கும் ஜனாதிபதி சிறிசேன, நாடு ஒரு குடும்பத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்க இனிமேலும் இடமளிக்கப்படாது என்றும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

“நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு சிறிது காலம் கடந்துள்ள போதும் நான் தான் ஜனாதிபதி என்பதனை இன்னமும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”யென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஆங்கில நாளிதழொன்றுக்கு அவர் வழங்கிய முதலாவது செவ்வி இதுவாகும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்காக அவர் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு ஆதரவளித்து வருகின்றார். ஜனாதிபதியின் பதவிக் காலத்தை குறைப்பதுவும் பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்துடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதுவும் இந்த திருத்தம் மூலம் கொண்டுவரப்பட வுள்ள முக்கிய அம்சங்களாகும்.

ராஜபக்ஷக்களின் செயற்பாடுகளால் இலங்கை ஒரு குடும்பத்தின் கைகளுக்குள் விழுந்து விட்டது என்றும் ஜனாதிபதி சிறிசேன கூறினார்.

“அரசியலமைப்பில் மேற்கொள்ளப் படவுள்ள திருத்தங்கள் மூலம் எதிர்காலத்தில் எந்தவொரு தனிக் குடும்பமும் இந்த நாட்டைக் கட்டியாள ஒதுபோதும் நாம் இடமளிக்க மாட்டோம்.” என்றும் அவர் வலியுறுத்தினார்.

2009 ஆம் ஆண்டு இராணுவ வெற்றியின் பின்னர் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை சின்னாபின்னமாகியிருப்பதாக ஜனாதிபதி சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உண்மையில் நாம் சீனாவைத் தவிர ஏனையவர்களிடமிருந்து விலகியுள்ளோம். நாம் மேற்குடனும் பகைமையை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியாவுடனும் பகைமையை ஏற்படுத்தியுள்ளோம். உங்களால் இப்படி கொண்டு செல்ல முடியாது. இலங்கைக்கு மேற்கும் தேவை, இந்தியாவும் தேவை, சீனாவும் தேவை.”

ஜனாதிபதி சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பணம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். சீனாவுக்கு விஜயம் செய்தார். அங்கு அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருப்பினும் கொழும்பு துறைமுக நகர் செயற்திட்டமானது கொழும்பு மற்றும் பெய்ஜிங் இடையிலான உறவுக்கு ஏற்பட்ட பெரும் சோதனையாகியுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் கீழ் வெளிநாட்டு நிதியிலும் உள்ளூரிலும் ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டங்களில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் குறித்து விரிவான விசாரணைகளை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். “நாம் யாருடனும் விரோதத்துடன் செயற்படவில்லை. நாம் அனைத்து நாடுகளுடனுமான நட்புறவை நீடித்துள்ளோம்” என்றும் ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை, மே மாதமளவில் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டிருப் பதாகவும் அதாவது ஜூன் மாத இறுதியில் அல்லது ஜுலை மாத தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்தவிருப்பதாகவும். வாக்குகள் ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வரலாமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Post