ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறப்போவதாகவும் மஹிந்த அணியினர் சூளுரைத்துள்ளனர்.
எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராக பாரிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில்,
ஆட்சி மாற்றம் நாட்டுக்கு நன்மையளித்திருப்பதாகவும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் இந்த மாற்றம் சர்வதேசத்துக்கு மட்டுமே சாதகத்தை வழங்கியுள்ளது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்ற வகையில் ஒரு ஆட்சி நாட்டில் நிலவுகின்றதே தவிர மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இது அல்ல. பாராளுமன்றத்திலும் இந்த விடயங்கள் தொடர்பில் எம்மால் கேள்விகேட்கும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டு மக்களுக்கும் இந்த விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இல்லாது போய்விட்டது.
குறிப்பாக இன்று நாட்டில் பிரதான இரண்டு சிக்கலான விடயங்கள் உள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பிலான அறிக்கையை குறிப்பிடலாம், அடுத்ததாக நாடு எதிர்நோக்கும் பொருளாதார சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டையும் தவிர ஏனைய அனைத்தையும் அரசாங்கம் பேசுகின்றது. ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் கேள்விகேட்டால் அரசாங்கம் எமது வாயையும் மக்களின் வாய்களையும் மூடி விடுகின்றது.
இன்று எதிர்கட்சியாக செயற்படுவோர் இந்த பிரச்சினைகள் தொடர்பில் வாய்திறக்காது செயற்படுகின்றனர். அரசாங்கமும் எதிர்கட்சியும் ஒரு அணியாக செயற்படும் வேளையில் நாட்டில் உண்மைகள் அனைத்தும் புதைக்கப்பட்டுவிடுகின்றன. ஆகவே எதிர்க்கட்சி பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ளும் நேரம் வந்துள்ளது.
அதாவது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டாலும் அவர்களால் எந்தவித பயனும் இல்லை. ஆனால் நாம் தான் எதிர்கட்சியின் பங்கினை மேற்கொண்டு வருகின்றோம். இதை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் தயாராகவும் உள்ளோம். ஆகவே எதிர்வரும் 19ஆம் திகதி விகாரமகாதேவி உள்ளக அரங்கில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒன்றுசேர்கின்றது. அதேபோல் பாராளுமன்றத்திலும் ஒன்றிணைந்த எதிர்கட்சியாக செயற்படவும் தீர்மானித்துள்ளோம்.
விமல் வீரவன்ச
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டபோதே இலங்கையின் மீதான அடுத்தகட்ட அடக்குமுறைகள் ஆரம்பித்துவிட்டன. அதாவது ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் திட்டமிட்டு முன்னெடுக்கும் காய்நகர்த்தல்களில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. ஆகவே இப்போது எமக்கு எதிராக மிகப்பெரிய ஆபத்துக்கள் மட்டுமே வரவுள்ளன.
அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக நடைமுறைபடுத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் பிரேரணையையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு அவர்களின் தேவைக்கேற்ப எமது அரசாங்கத்தை இயக்குவதே இப்போது எமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
குறிப்பாக இலங்கையின் நடைமுறையில் இருக்கும் பிரதான இரண்டு சட்டங்களை நீக்க அல்லது மாற்றியமைக்க அரசாங்கம் தயாராக உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தையும், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தையும் நீக்க அல்லது மாற்ற இவர்கள் தயாராக உள்ளனர். ஆரம்பத்தில் வரதராஜப்பெருமாள் 13ஆம் திருத்தத்தை மீறி செயற்பட ஆரம்பித்தபோதும் மாகாணசபை அதிகாரங்களுக்கு அப்பால் செயற்பட ஆரம்பித்த போதும் அப்போதைய அரசாங்கம் இந்த பொதுஜன பாதுகாப்பு சட்டத்தின் மூலமாகவே இவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தியது. அப்போது இந்த சட்டமே கைகொடுத்தது. அதே நிலைமை மீண்டும் வருகின்றபோது அரசாங்கத்தினால் தடுக்க முடியாத வகையில் இருக்கவே இந்த சட்டத்தை நீக்க இவர்கள் திட்டம் போட்டுள்ளனர். அகவே இவற்றை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் எமது இராணுவத்தை பழிவாங்கும் நடவடிக்கைகளை ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர். இவற்றை பாராளுமன்றத்தில் தட்டிக்கேட்கும் அதிகாரம் எமக்கு இல்லாமல் போயுள்ளது. ஆகவே முதலில் எம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக முதலில் எம்மை மாற்றிக்கொள்ளவே இந்த முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
கலப்பு நீதிமன்றம் என்பது உள்ளக விசாரணைப் பொறிமுறை என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் இதில் உள்ளக விசாரணையாக நடைபெறுவதற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. அதாவது இலங்கையின் உள்ளக சட்டதிட்டங்களுக்கு அமைய எமது தரப்பே ஒரு விசாரணையை மேற்கொள்ளுமாயின் அதை உள்ளக விசாரணைகள் என குறிப்பிட முடியும். அதேபோல் சர்வதேச தலையீட்டில் முழுமையான சர்வதேச பொறிமுறைகளுக்கு அமைய செயற்படும்போது அதனை முழுமையான சர்வதேச விசாரணை என குறிப்பிட முடியும்.
ஆனால் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது கலப்பு முறைமையாகும். இதில் குறிப்பிடப்படுள்ள விடயங்களில் பெரும்பாலான விடயங்கள் சர்வதேசத்தின் தலையீட்டில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் இது ஒரு சர்வதேச விசாரணையின் பக்கம் சுட்டிக்காட்டும் விசாரணையாகவே கருதப்பட வேண்டும்.
மக்களை ஏமாற்ற இவர்கள் முன்வைக்கும் கருத்துகளை நாம் முழுமையாக எதிர்கின்றோம். அதேபோல் ஒன்றிணைந்த எதிர்கட்சியாக எமது கடமையையும் நாம் சரியாக செய்து முடிப்போம்.
கேள்வி :- பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி செயற்படும் போது உங்களால் எவ்வாறு எதிர்க்கட்சியாக செயற்பட முடியும்?
பதில்: பாராளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டாலும் அவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சார்பாகவே உள்ளன. அதேபோல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கைபொம்மையாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. ஆகவே அவர்களை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி :- அப்படியாயின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை உங்களில் வசமாக்கும் நோக்கம் உள்ளதா?
பதில்: அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சியாக செயற்பட்டால் மட்டுமே எம்மை மக்கள்ஏற்றுக்கொள்வார்கள் என்பது அர்த்தமற்ற கதையாகும். ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயற்படும் போது அது சபாநாயகரினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எம்மை ஏற்றுக்கொள்வார்கள் என நாம் எதிர்பார்த்தும் அது நடைபெறவில்லை. ஆனால் இனிவரும் காலங்களிலும் நாம் எதிர்கட்சியாகவே செயற்படவுள்ளோம். ஆகவே எதிர்க்கட்சி பதவியும் எமக்கும் கிடைக்கும்.
கேள்வி; ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாகிய செயற்படுவதாக கூறுகின்றீர்கள் அப்படியாயின் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அழைப்பு உள்ளதா?
பதில்: ஆம், எதிர்க்கட்சியாகிய செயற்பட விரும்பும் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுக்கு தனிப்பட்ட ரீதியில் இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் அவரும் கலந்துகொள்வார் என்று நம்புகின்றோம். அவர் இப்போதும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராகவே செயற்படுகின்றார் என்றார்.