நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்னும் பயின்று கொண்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினரான குமார் வெல்கம, எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் இன்று (நேற்று) அறிவிப்பதாக ஏற்கெனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு என்ன நடந்தது என்று சபாநாயகரிடம் வினவினார்.
அக்கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், இது புதிய அனுபவமாகும். மிகவும் கவனமாக பயின்று அதுதொடர்பில் அறிவித்தல் விடுக்கவேண்டும்.இதன்போது குறுகிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அப்படியானால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரையிலும் அந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்படும் என்று வினவினார்.இது புதிய அனுபவமாகும். மிகவும் ஆழமாக பயிலும் வரையிலும் ஒத்திவைக்கப்படும். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று என்னால் கூறமுடியாது என்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பதிலளித்தார்.
குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, அப்படியானால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று கேள்வியெழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளிக்காத சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்துகொடுத்தால் நல்லதல்லதல்லவா? என்று அநுர குமார திஸாநாயக்க எம்.பியிடம் வினவினார்.இந்த வாதப்பிரதிவாதங்கள் அவையில் இடம்பெற்று கொண்டிருந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா, அவையில் பிரசன்னமாய் இருக்கவில்லை.