எதிர்க்கட்சித் தலைவர் யார் ? என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவா அல்லது தினேஷ் குணவர்த்தனவா அல்லது இரா. சம்பந்தனா? என்ற சர்ச்சை அரசியலில் தலைதூக்கியது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் சுதந்திரக் கட்சியினர் இணைந்து தேசிய அரசு அமைத்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா பதவி வகிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன வாசுதேவ நாணயக்கார விமல் வீரவன்ச உட்பட பலர் போர்க் கொடி தூக்கினர். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியும் நிமால் சிறிபால டி. சில்வா எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என்று வலியுறுத்தியது்.
பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை கடும் வாத பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. தினேஷ் குணவர்த்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் எம்பிக்களிடம் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும் ஒரு பிரிவினர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு ஆதரவாக கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டனர். இவ்விதம் இரு தரப்பினரும் ஏட்டிக்கு போட்டியாக எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என சபாநாயக அறிவித்திருந்தார்.
எனவே இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் கூடவுள்ள பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.