Breaking
Mon. Dec 23rd, 2024

 

-முர்ஷித் வாழைச்சேனை-

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரைத் தெரிவு செய்வதற்காக அவர் சார்ந்த சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்கின்ற தேர்தலாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சரிப் அலி ஆசிரியர் அமைப்பின் ஏற்பாட்டில், றோஸ் முன்பள்ளியின் 23 வது மாணவர் தரமுயர்த்தல் விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) செம்மண் ஓடை அல்/ஹம்றா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உங்களது வட்டாரத்திலே வாக்களிக்கின்றவர்கள் யானை சின்னத்திற்கு புள்ளடியிட்டு, இந்த பிரதேசத்திலே ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்று, எதிர்காலத்திலே கோறளைப்பற்று மத்திய பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்திலே, நீண்டகாலமாக எம்முடன் செயற்பட்டு வருகின்றவரைத்தான் வேட்பாளராக களமிறக்கியிருக்கிறோம். அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்று உங்களிடம கேட்டுக்கொள்கின்றேன்.

கோறளைப்பற்று மத்திய பிரதேச சபை தொடர்பாக இங்கு இருக்கும் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. செம்மண்ஓடை,  மாவடிச்சேனை,  பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை,  ரிதிதென்ன, ஜெயந்தியாய, கேணிநகர், தியாவட்டுவான் போன்ற கிராமங்களை உள்ளடக்கியதாக ஒரு புதிய பிரதேச சபையை உருக்குவாதற்கு மிக நீண்டகாலமாக நாம் போராடிவருகின்றோம். அதனை வென்றெடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டிய பொறுப்பு இப்பகுதி மக்களுக்கு உண்டு என்று கூறினார்.

இந்நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, தரமுயர்த்தப்படும் மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச் சின்னமும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அமைப்பின் தலைவர் ஐ.எல்.சம்மூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அல்/ஹம்றா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.சுபைர்தீன், சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று பிரதேச சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐ.தே.க வின் வேட்பாளர் எச்.எம்.எம்.ஹக்கீம் மற்றும் சரிப் அலி ஆசிரியர் அமைப்பின் பணிப்பாளர் வை.எல்.மன்சூர் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related Post