கடந்த 09.03.2019ம் திகதி சனிக்கிழமை மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற இலவச மின்சார மற்றும் குடிநீர் வழங்கும் செயற்றிட்டம் – 2019 நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஜெமீல் கலந்து கொண்டிருந்தார்.
சுமார் ஒரு வருட காலமாக நேரடி அரசியல் செயற்பாடுகளில் கலந்து கொள்ளாமலிருந்த ஜெமீல், இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு, பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவரின் பேச்சுக்களனைத்தும், அவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கெதிராகவும், தனது கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தான் என்பதை நொடிக்கி நொடி நிரூபணம் செய்யும் வகையிலும் அமைந்திருந்தது.
தனது சுகயீனம் காரணமாகவே தான் நேரடி அரசியல் களங்களிலிருந்து விலகி இருந்ததாகவும், எதிர்வரும் தேர்தல் எதுவாக இருந்தாலும், அதில் அ.இ.ம.காவின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அனுமதியோடு போட்டியிடுவேன் எனவும் கூறியிருந்தார்.
கலாநிதி ஜெமீல் முஸ்லிம் காங்கிரஸின் பல தேர்தல்களை களம் கண்டிருந்தாலும் எதிர்வரும் தேர்தலே அவர் அ.இ.ம.காவினூடாக போட்டியிடும் முதல் தேர்தலாக அமையப்போகிறது.
அவரின் இந்த அழைப்பானது, அவர் இப்போதிருந்தே தேர்தல் களத்துக்குத் தயாராகியுள்ளதை தெளிவாக்குகிறது. இந்நிகழ்வில் 80 குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் குடிநீரிணைப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.