–நஜிமுதீன் எம்.ஹஷான்-
இலங்கை நாடும், நாட்டு மக்களும் அரசியலுக்குள் ஆட்பட்டவர்களாய் இருந்துகொண்டு, தன் வாழ்வியலை பிரதான விடயங்களோடு இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், இம்மக்களை மீண்டும் ஒரு எதிர்பார்ப்புமிக்க தேர்தல் அரங்கிற்குள் அழைத்துச் செல்லும் கட்டாயம் அரசுக்குள் நிலைகொண்டிருப்பதை காலக்கண்ணாடியில் தெளிவாக நோக்க முடிகின்றது.
ஆம்! அதுதான் சிறுபான்மையின மக்கள் ஆவலுடன் காத்திருக்கும், எதிர்பார்த்திருக்கும் தன் இனங்களினது அரசியல் ரீதியான ஜனநாயகமிக்க, மனிதநேயமிக்க உதவிகளை, தீர்வுகளை, நன்மைகளை குறிப்பாக, தம் மக்கள் பிரதிநிதிகள் மூலமாக மத்திய அரசு, மாகாண சபைகளின் முதலமைச்சு மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களினூடாக அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சிகள், கட்சித் தலைவர்கள் மூலமாக குறிப்பிட்ட கால எல்லைகளுக்குள் பல்லினம் சார்ந்த ஜனநாயக ரீதியிலான மாகாண சபை முறைமையின் கீழ் வாக்களித்த மக்கள், குறிப்பிட்ட மாகாணங்களுக்குள் மனிதாபிமான உதவிகளையும், பல்வேறுபட்ட பணிகளையும் பெற்று மக்கள் சுபீச்சமாய் வாழும் நிலைபாட்டினையே பழமை வாய்ந்த மாகாணசபை தேர்தல் முறை பிரதிபலித்து நிற்கின்றது.
அந்தவகையில் பல பிரதானமான கட்சிகள் ஏட்டிக்குபோட்டியாய் முன்கூட்டியே தங்களது நிலைப்பாட்டினை வலுப்படுத்தி, கட்சிகளையும், கட்சிகளின் உள்விவகாரங்களையும் சீரமைப்புச் செய்து, தன் பிரதேச மக்களது வாக்குப் பலத்தின் மூலமாக மாகாண சபையினை அலங்கரிப்பதற்காக இப்போதிருந்தே தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
அதிலும் குறிப்பாக, சிறுபான்மை கட்சிகள் பழைய தேர்தல் முறைமையின் கீழ் தான் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டுமென்று உறுதியான கொள்கையிலே பயணிப்பதையும் பார்க்க முடிகின்றது. புதிய நல்லாட்சி அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர், யாப்பு சீர்திருத்தங்களை தங்களது பெரும்பான்மை இனத்திற்கு வசதியாக அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் செயற்பட்டதையும், செயற்பட்டு வருவதையும் காணமுடிகின்றது.
இதன் ஒரு அங்கமாகவே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதம மந்திரியாக ரணில் விக்ரமசிங்கவும் ஆட்சி பீடமேறிய கால எல்லைகளுக்குள், மாகாணசபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடாத்தப்பட வேண்டும் என்பதே இவர்களது நோக்கமாக இருந்து வந்ததையும் ஐயமின்றி சுட்டிக்காட்ட முடிகின்றது. இந்த தேர்தல் முறைமை மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய பாதிப்புண்டு என்பதை நன்குணர்ந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நல்லாட்சி அரசை கண்டித்து மாகாண சபை தேர்தல் பழைய தேர்தல் முறையின் கீழ் நடாத்தப்படுதல் வேண்டுமெனவும், அதுவே சிறுபான்மை இன மக்களுக்குச் சிறந்த விமோசனத்தை பெற்றுக்கொடுக்க கூடியதென்றும், பாராளுமன்றம் தொட்டு சர்வதேசம் வரை குரல் கொடுத்ததையும், கொடுத்து வருவதையும் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
சிறுபான்மை இன மக்களின் தனித்துவமான கட்சிகளின் ஏகோபித்த தீர்மானங்களால், விரும்பியோ விரும்பாமலோ இன்று விழிப்படைந்திருக்கும் நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் குறிப்பிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிலும் குறிப்பாக, தமிழ்-முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பழைய முறையிலான மாகாண சபைத் தேர்தல் இடம்பெற வேண்டும். முடிவினை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலமாய் விடை காணப்பட்டு, எதிர்பார்ப்புமிக்க பழைய முறையிலான தேர்தல் வர்த்தமானியை வெளியிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் நிலவுவதையும் உணர முடிகின்றது.
பழைய முறையில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும் என்னும் கோஷம் எழுந்திருப்பதானது, முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையினையும், அச்சமூகத்தின் பிரதான கட்சித் தலைவர்களின் துணிகரமான ஆற்றலையும் மக்கள் மத்தியில் பறைசாற்றி நிற்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அந்தவகையில், வட்டாரமுறையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலானது, இலங்கை அரசியலில் பாரிய அதிர்வினை ஏற்படுத்தி அரசியல் இராஜதந்திரிகளுக்கும் ஒருவிதமான வியப்பினையும் கொடுத்திருந்தது. குறிப்பாக பிரதம மந்திரிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான மொட்டு கட்சியான பொதுஜன பெரமுன அணியினர், சுதந்திரக் கட்சியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை படுதோல்வியுற்றது.
இத்தோல்வியானது மஹிந்த ராஜபக்ஷ மீதான சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்கள் கொண்டிருக்கும் நீடித்த அதிருப்தியின்மையே காரணமாகும் என்று ஐயமின்றி கருதவும் முடிகின்றது.
குறிப்பாக, தற்கால அரசியலில் சிறுபான்மையின மக்களின் பலமும், பிரதான பிரதிநிதிகளின் பேரமும் மென்மேலும் பரவி தொடர்ந்தும் இறுக்கமடைந்து பயணி;ப்பதை பார்க்க முடிவதோடு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடைய ஸ்தாபகத் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மீதான அமோகமான இன, மத வேறுபாடற்ற மக்கள் ஆதரவும், அரசியல் ஜனரஞ்சகமும் நீதமான செல்வாக்கும், மயில் சின்னக் கட்சியின் மகோன்னதமும் தனித்துவம் பெற்று மனிதாபிமானத்துடனும், சேவை மனப்பாங்குடனும், வெற்றியின் உயர்ச்சியில் கோலோச்சி பரிணமிப்பதை தெள்ளத்தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது, குறுகிய காலங்களுக்குள் பாரிய வளர்ச்சியினை கண்டிருப்பதானது அக்கட்சியினுடைய தலைமையின் கௌரவத்தையே மென்மேலும் பறைசாற்றுகின்றது.
மேலும், நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் சிறப்புமிக்க மக்கள் செல்வாக்கைப் பெற்று நாட்டின் மூலைமுடுக்கெங்கும் அகலக்கால் விரித்து முன்னோடித் தரம் பெற்றிருப்பதானது, சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த வரமேயாகும். அத்தோடு நாட்டை ஆளும் அரசு காலாகாலமாய் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை தன்கூடவே அரவணைத்து, பலமான அதிகாரங்களை வழங்கி, மக்களின் இன்னல்களைத் தீர்த்து, பல்துறை சார்ந்த அபிவிருத்திகளை அரங்கேற்றி தங்களுக்கு ஆதரவான கட்சியாகவே இக்கட்சினை நோக்கக்கூடிய நிலையினையும் திரையின்றி பார்க்க முடிகின்றது.
ஆளுங்கட்சிக்குள்ளே இருந்து கொண்டு தன் இனத்திற்காய் பெறவேண்டிய உயர்வான உரிமைகளுக்காய் பாராளுமன்றத்தில் பல தடவைகள் அமைச்சர் ரிஷாட் குரல் கொடுத்த வரலாறுகளையும், நினைவில் கொள்வது சாலச்சிறந்தது.
குறிப்பாக எதிர்வரும் மாகாணசபை தேர்தல் மூலமாக தன் அந்தஸ்த்;தினை, பலத்தினை இன்னும் பல மடங்கு உயர்த்திட வேண்டுமென்ற முனைப்புடன், தார்மீக பொறுப்புடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும், அதன் கௌரவ தலைமையும், வெற்றிகளை நோக்கி கங்கணம் கட்டி செயலாற்றும் என்பது திண்ணம்.
நிச்சயம் அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிம்மசொப்பனம் பெறும் என்பது அசைக்க முடியாத ஆருடம்….!