Breaking
Mon. Dec 23rd, 2024

மேல் மாகணத்தில் எந்தவொரு இடத்திலும் காணிகளை நிரப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லையென அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு எதிரான எந்தவித தலையீட்டுக்கும் கீழ்படிய வேண்டாமென உத்தியோகத்தர்களுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பாக நேரடித் தீர்மானங்களை எடுக்கும் உத்தியோகத்தர்கள் சார்பில் தான் தெரிபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது சம்பந்தமாக ஏற்கெனவே ஏதேனும் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் தயக்கமின்றித் தனக்கு அறியத்தருமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் மாகாணத்தில் காணிகளை நிரப்புவதற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அங்கிகாரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு இதன்போது அவர் ஆலோசனை வழங்கினார்.

வெயாங்கொடை சியனே கல்வியியற் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக உத்தியோகத்தர்களிடம் விடயங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, எந்தவித குறைபாடுகளுமின்றி அவற்றை முன்னெடுக்குமாறு அறிவுரை வழங்கினார்.

வரையறையற்ற விதத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட காணி நிரப்புதல் நடவடிக்கையே அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் விளைவாக கம்பஹா மாவட்ட மக்களும் அனர்த்தங்களை எதிர்கொண்டனர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அபிவிருத்தித்திட்டங்களை தயாரிக்கும்போது இவ்வாறான நிலைமைகள் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார்.

கால்வாய்களைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பதற்குரிய சீரான ஓர் ஒழுங்குமுறை காணப்படாமையும் இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதுடன், இது தொடர்பாக முறையானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

பாதிக்கப்பட்ட வீடுகள், பாடசாலை கட்டடங்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விடயங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

அழிவடைந்துள்ள கால்வாய்களை மீண்டும் புனரமைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட வாழ்வாதார மார்க்கங்களை மீளக் கட்டியமைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மாவட்டத்தில் பாரதூரமான ஒரு பிரச்சினையாக விளங்கும் கழிவுப்பொருள் முகாமைத்துவத்துக்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

By

Related Post