Breaking
Mon. Dec 23rd, 2024

-எஸ். ஹமீத்=
சொந்த நாட்டிலேயே 25 வருடங்களாக அகதிகளாக வாழும் கொடூரமான துர்ப்பாக்கியம் இந்த உலகத்தில் இலங்கையின் வடக்கு மாகாண முஸ்லிம்களுக்குத்தான் ஏற்பட்டிருக்கும். கையில் 200 ரூபா பணத்துடனும் ஒரு ஷொப்பிங் பேக் உடுப்புடனும் வெளியேற்றப்பட்ட அந்த மக்களில் மிகப் பெரும்பாலோனோர் இந்த நிமிடம் வரை ஓலைக் கொட்டில்களில் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருப்பதானது இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சோகம்.

அன்று அகதியாக வெளியேறிய ஒரு வயதுக் குழந்தை இன்று இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையாக, தாயாக அதே அகதி முகாமிலேயே  வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம், இந்தப் பிரபஞ்சத்தின் எந்த ஒரு மூலையிலும் நடைபெறவில்லை. ஒழுகும் ஒரு சிறு கொட்டிலுக்குள்ளேயே சமையல்- படிப்பு- விருந்தினர் உபசரிப்பு- திருமணம்- தாம்பத்தியம் -பிள்ளைப் பேறு-மையித்து…எல்லாமே! .

அந்த அகதிகளின் பசிபோக்க ஓரளவேனும் உணவு வழங்கிய, மானம் காக்க கொஞ்சமேனும் உடை வழங்கிய, இரவில் படுப்பதற்கு ஒரு சிறு குடிசையையாவது கட்டிக் கொடுத்த ஏராளம் தனவந்தர்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால், நமது கொடை வள்ளல்களினால் எத்தனை வருடங்களுக்குத்தான் இவ்வாறு தொடர்ந்து உதவ முடியும்..? அவர்களெல்லாம்  பில்கேட்ஸுகளா அல்லது அம்பானிகளா, என்ன?

ஒரு சிறு தொகையினர் தாமாகவே முயன்று வறுமையின் கோரப் பிடியிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள, மிகப் பெரும் தொகையினர் வாழும் வழியற்று, அதே முகாம்களில் துக்கத்தோடும் பட்டினியோடும் இன்றும் வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஓரளவாவது நிம்மதி தரக் கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு நமது சமூகத்திடம் நிரந்தரமான செயல் திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இந்த மக்களின் அவல வாழ்வை விற்று அரசியல் கொள்ளையடிக்கும் திட்டம் நமது சமூகத்தில் பலரிடம் இருந்தது.

மறைந்த மா மனிதர் அஷ்ரஃப் அவர்கள் இம்மக்கள் மீது மிக்க அனுதாபம் கொண்டிருந்தார். இம் மக்கள் மத்தியிலிருந்து அரசியல்  அதிகாரம் கொண்ட ஒருவரை உருவாக்க எண்ணினார். அதன் விளைவாக சுந்தரமூர்த்தி அபூபக்கர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக்கியதோடு பிரதியமைச்சர் பதவியையும் வழங்கினார். அபூபக்கர் அவர்களும் தனது சக்திக்குட்பட்ட விதத்தில் இம் மக்களின் துயர் துடைக்கப் பாடுபட்டார்.

அவரின் பின்னர் மர்ஹூம் மசூர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதியமைச்சராகி, அமைச்சராகி இந்த அகதி மக்களுக்குப் பெரும் சேவை செய்தார். தனது சொந்தப் பணத்தைக் கொண்டும் மர்ஹூம் மசூர் அவர்கள் ஆற்றிய சேவைகள் எண்ணற்றவை. அல்லாஹ் மர்ஹூம்களான மா தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்கும் மசூர் ஹாஜியாருக்கும் மேலான சொர்க்கத்தை வழங்குவானாக; ஆமீன்!

இன்றைய அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்கள் இம்மக்களுக்கு இன்று ஆற்றி வருகின்ற பணிகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தானும் ஓர் அகதியாக வெளியேறி, தனது சுய முயற்சியால் படித்துப் பொறியியலாளராகப் பட்டம் பெற்று, தான் சார்ந்த அகதி மக்களின் கண்ணீர் துடைப்பதற்காக அரசியலுக்குள் வந்து, பிரதியமைச்சராகி, அமைச்சராகி இன்று ஒரு கட்சியின் தேசியத் தலைவராக உயர்ந்திருக்கும் இவரது வெற்றிகளுக்குப் பின்னால் அல்லாஹ்வின் பொருத்தமும் கருணையும் நிறைந்திருக்கிறதென்றே கொள்ள வேண்டும்.

சாதாரண ஓர் ஏழை ரிசாதினால் அகதிகளாக வாழும் பல்லாயிரம் மக்களின் துயர் துடைப்பதென்பது முடியாத காரியம். ஆனால் ஓர்  அமைச்சராக இருந்து இம் மக்களுக்குக்  கூடுதலான சேவைகளைச் செய்ய முடியும். இதுவே யதார்த்தம்.

மர்ஹூம் மசூர் ஹாஜியார் அமைச்சராக இருந்து அரசாங்கத்திற்கூடாக இம் மக்களுக்கு ஆற்றிய சேவைகளை விட, தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஆற்றிய சேவைகள்தான் மிக அதிகம். ஏனெனில், அமைச்சராக இருந்தாலும் இம் மக்களுக்குப் பாரிய பணிகளைச் செய்வதற்கான ‘அதிகாரம்’ மிக்க அமைச்சுப்  பதவி  அவருக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறான ஓர் அமைச்சுப் பதவியைக் கொடுக்க ரவுப் ஹக்கீமுக்கும் மனமில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் உதயமான காலம் தொட்டு இந்தக் கட்சிக்காகவே வாழ்ந்தவர்கள் வடபுல முஸ்லிம்கள். முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கியமைக்காகவும்தான் இம் மக்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரசுக்காக இம் மக்களே மகத்தான தியாகத்தைச் செய்தவர்கள். ஆனால், ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் பின்னர் இம்மக்கள் எந்த வகையிலும் கணக்கிலெடுக்கப்படாது கைவிடப்பட்டார்கள்.

எனினும், ரிஷாத் பதியுதீன் இந்த மக்களின் ஆழமான வலிகளைத் தானும் ஒருவனாக இருந்து அனுபவித்தவர். பசி நெருப்பில் வெந்தவர். ஓலைக் கொட்டிலுக்குள் ஒடுங்கிச் சுருண்டு கிடந்தவர். படிப்பைத் தொடரப் படாத பாடு பட்டவர். அதனால் அவர் இம் மக்களின் மீது அதீத அக்கறை செலுத்தத் தொடங்கினார். இவர்களின் விடிவுக்காக உழைக்கத் தொடங்கினார். தனி ஒருவனாக நின்று , போராடி அதிகாரமிக்க அமைச்சுப் பதவியைப் பெற்றார். அந்தப் பதவியைக் கொண்டு மற்றெல்லோரையும் விட மிக அதிகமாக இம்மக்களின் இருண்ட வாழ்வில் விடிவைக் கொண்டுவர உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் மீது சிலருக்கு (சிலருக்குத்தான்…பலருக்கல்ல ) பொறாமை. மண் குடிசையில் வாழ்ந்தவன் மந்திரியாவதா…என்ற காழ்ப்புணர்வு. தரையில் படுத்தவன் தலைவனாவதா…என்ற ஆதங்கம். இதனால் தமது இஷ்டத்துக்கு இவர்கள்  ரிஷாத் மீது அபாண்டமான -ஆதாரமற்ற கட்டுக் கதைகளை அள்ளி வீசுகிறார்கள். வன்னி மாவட்டத்தின் ஒவ்வொரு முஸ்லிமும் இதுபற்றி நடுநிலைமையில் நின்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்னும் சிலருக்கு எம். பி. ஆகும் ஆசை. பட்டினி கிடந்தவன் பாராளுமன்றம் செல்ல முடியுமென்றால், பாலும் சோறும் தின்று வளர்ந்த என்னால் முடியாதா…என்ற பகற் கனவு. அதனால் ரிஷாத் மீது பொய்யான கதைகளைப் புனைந்து பரப்புகிறார்கள். வன்னியிலிருந்து ரிஷாத் தவிர்ந்த வேறொருவர் இனி  எம். பி. ஆகி, பிரதியமைச்சராகி, அமைச்சராகி வன்னி மாவட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்குச்  சேவை செய்வார் என்பது இன்னும் பல வருடங்களுக்கு நடக்காத விடயம் என்பதை இவ்வாறானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்     .

எனவே, அகதிகளின் வாழ்க்கையில் சுபீட்சத்தை  விரும்புகின்ற-வடபுலத்தின் அபிவிருத்தியை விரும்புகின்ற-தொழில் வாய்ப்புகளை விரும்புகின்ற – சொந்த ஊரில், சொந்த வீட்டில் மீளக் குடியமர விரும்புகின்ற-தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ  விரும்புகின்ற-பாதுகாப்பை விரும்புகின்ற வன்னியின் ஒவ்வொரு வாக்காளனும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று  இன்னும் பலம் பொருந்திய, அதிகாரங்கள் நிறைந்த அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்ளப் போகும் ரிசாத் பதியுதீனையே ஆதரிக்க வேண்டும்.

ஆமாம்..பாவப்பட்ட-பரிதாபத்திற்குரிய  நமது சமூகம் தனக்கான ஓர் அந்தஸ்துள்ள அமைச்சரை எந்த விதத்திலும் இழந்துவிடக்  கூடாது

அல்லாஹ் மிகப் பெரியவன்!

Related Post