Breaking
Wed. Dec 25th, 2024

ஏ.எச்.எம்.பூமுதீன்

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,

பொது பல சேனாவின் முஸ்லிம் விரோத எதிர்ப்பு நடவடிக்கைகளால், நாட்டில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என நாம் அஞ்சினோம். அளுத்கம தாக்குதல் சம்பவம், கிராண்பாஸ், மஹியங்கனை, தம்புள்ளை, தெஹிவளை பள்ளிகள் தாக்கப்பட்டமை மற்றும் நோலிமிட் வர்த்தக நிலையம் தீவைக்கப்பட்டமை முதலான சம்பவங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்தது.

இதனைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தபோது, அவர்களைத் தண்டித்தால் தனது வாக்கு வங்கி இல்லாது போகும் என்றார். புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்த எமது புலனாய்வாளர்களுக்கு, நோலிமிட் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவற்றுக்கு முடிவுகண்டு, நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், சமாதானத்துடனும் வாழக்கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் நாம் நன்றாக ஆலோசித்து, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். எமதுநாட்டு மக்கள் புத்திசாலிகள். இனவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்பர். நாட்டுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த 2005 ஆம், 2010 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவரை ஆட்சியில் இருத்தினோம். தற்போது நாட்டு மக்கள் சமாதானத்துடன் வாழவேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

நான் அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் தீர்மானம் எடுத்த நாளன்று, ஜனாதிபதிக்கு நெருங்கிய ஒருவரிடமிருந்து எனக்கு கிடைத்த செய்தியில், ”நீங்கள் தவறான முடிவெடுப்பீர்களாயின், அது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எனது உயிருக்கு ஆபத்த ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் பொறுப்புக்கூற வேண்டும்.

எமது கட்சியின் உறுப்பினர் அமீர் அலிக்கு அண்மையில் வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றி தற்போது அரச தரப்பினரால் பேசப்படுகிறது. 2005, 2010 ஆம் ஆண்டுகளில் எமக்கு தேசியப் பட்டியல் எம்.பி. பதவியொன்று வழங்கப்படும் என அரசால் உறுதியளிக்கப்பட்டபோதும், வழங்கப்படவில்லை. இந்நிலையில்தான் அந்த எம்.பி. பதவியை தற்போது வழங்கியுள்ளனர். அதையும் நாம் உடனடியாக ஏற்கவில்லை. எமது மக்களின் கோரிக்கைக்கு அமையவே அதைப் பெற்றோம். என்றார்.

Related Post