Breaking
Sun. Dec 22nd, 2024

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவ பாதுகாப்பை வழங்கியுள்ளேன் ஆனால் நாட்டின் ஜனாதிபதியான எனது பாதுகாப்பிற்கு ஒரு இராணுவ வீரரையேனும் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக் ஷ இரண்டு வருடங்களிற்கு முன்னதாக தேர்தலை நடத்தினார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிபிலை நகரில் சனிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி சம்மேளனத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இங்கு உரையாற்றுகையில் தெரிவிப்பதாவது, ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமும் 3 மாதங்களும் கழிந்துள்ள நிலையில் இன்று வரை எனது பாதுகாப்பிற்கு ஒரு இராணுவ வீரரையேனும் நியமிக்கப்படவில்லை.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக் ஷவிற்கு இராணுவ பாதுகாப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டேன். மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் தோல்வி கண்ட அரச தலைவரொருவருக்கு பாதுகாப்புத் தரப்பினரின் தனக்கு விருப்பமானவர்களை தெரிவு செய்து கொண்டு வீட்டுக்கு  ஹெலிகொப்டரில் செல்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஒரே ஜனாதிபதி நானாகத்தானிருப்பேன். இவ்வாறான ஒரு நிகழ்வு உலகில் எங்குமே இடம்பெற்றிருக்காது.

இரண்டு வருட காலம் ஆட்சி செய்வதற்கு கால அவகாசம் இருந்தும் மஹிந்த ராஜபக் ஷ தேர்தலை நடத்தினார். இதற்கு சோதிடர்கள் கூறிய ஆலோசனைகள் மட்டுமே காரணமல்ல.

2015 ஆம் ஆண்டு வெளியாகும் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பொருளாதார நெருக்கடி தலைதூக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்டுதான் தேர்தலை நடத்தினார்.

இன்று தலைதூக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகள் எமது நாட்டில் மட்டுமல்ல உலகில் அனைத்து நாடுகளும் இதற்கு முகம் கொடுத்துள்ளன.

எனவே இன்றைய நிலையில் மஹிந்த ஆட்சியில் இருந்தாலும் இதனை தடுத்திருக்க முடியாது. நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் யுத்தத்தை  வென்ற தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

படை வீரர்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று தேர்தலின் போது கூச்சலிட்டனர் ஆனால் இன்று மின்சாரக் கதிரையும் இல்லை சர்வதேச நீதிமன்றமும் இல்லை அனைத்து மக்கள் மனதிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டன.

மஹிந்த ராஜபக் ஷவையும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மின்சாரக் கதிரையில் உட்காரவைப்பதற்கு மாறாக இன்று பாராளுமன்ற ஆசனங்களில் அமர வைப்பதற்கு முடிந்தமைக்கு நான் ஜனாதிபதியாக பதவியேற்றதே காரணமாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய கட்சிகளை ஏற்படுத்தி வெற்றி பெற முடியாது.சந்திரிக்கா பண்டாரநாயக்க புதிய கட்சியை உருவாக்கினார். ஆனால் இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலமாகவே ஜனாதிபதியானார். இன்று அச்சமின்றி சுதந்திரமாக ஜனாதிபதி உரிமைகளுடன் வாழும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை சர்வதேசத்தில் தனிமைப்பட்டிருந்தது. ஆனால் இன்று முழு உலகமும் எமக்கு அதரவை வழங்குகின்றது.

முதன் முறையாக அடுத்த மாதம் ஜப்பானில் இடம்பெறும் ஜி 7 நாடுகளின் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேசத்தை நாம் வெற்றி கொண்டுள்ளோம் என்பது  வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

By

Related Post