துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
எனது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், நேற்று 11.12.2014) நடந்த கண்ணியத்துக்குரிய உலமாக்களுடனான சந்திப்பில் நான் கூறிய கருத்துக்களை கூட திரிபுபடுத்தி என்னில் சேறு பூச முயற்சிக்கின்றனர். நான் கூறியதாவது;
“எதிர்காலத்தில் நாம் எத்தனை பேர் எம் பி யாகப் போகிறோம்?எத்தனை பேர் மாகாண சபை உறுப்பினராகப் போகிறோம்? கட்சி எத்தனை வாக்குகள் எடுக்கப் போகிறது? என்பவற்றை மட்டும் தான் மனதில் கொண்டு நாம் தீர்மானம் எடுக்கப்போகிறோமா? அதற்காகத்தான் இந்தக் கட்சியை உருவாக்கினோமா? அதற்காகத்தான் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் காங்கிரஸிக்குப் பின்னால் அணி திரண்டார்களா? இல்லை.
அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் முஸ்லிம்களின் இலட்சியம் என்றால், ஏன் அக்கரைப்பற்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதுமா லெப்பை, கல்முனையில் முன்னாள் அமைச்சர் மன்சூர், சம்மாந்துறையில் முன்னாள் அமைச்சர் மஜீத் என மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைத் தூக்கி வீசிவிட்டு, முஸ்லிம் சமூகம் அஷ்ரப் என்ற மனிதருடைய முஸ்லிம் காங்கிரஸிக்குப் பின்னால் அணி திரள வேண்டும். எண்ணிக்கையல்ல இங்கு பிரச்சினை; நமக்காகப் பேசுவதற்கும், நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், நமது பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான; அரசியல் நிலைப்பாடுகளை எடுத்து, அவற்றைச் செயற்படுத்துவதற்கான ஒரு இயக்கம் வேண்டும் என்பதால் தான்; முஸ்லிம் சமூகம் மு.கா வின் பின்னாலும் அஷ்ரப் என்கின்ற மனிதருக்குப் பின்னாலும் அணிதிரண்டது.
இந்த விடயங்களை கவனத்தில் கொள்ளாமல் மு.கா எந்தத் தீர்மானத்தையும் அவசரமாக எடுத்து விடக்கூடாது. சுமார் 50 வருட ஜனநாயகப் போராட்டத்தையும், 30 வருட கால ஆயுதப் போராட்டத்தையும் செய்த தமிழ் சமூகமே, இன்னும் எந்தத் தீர்மானத்திற்கும் வராத போது, முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் அவசரமாகத் தீர்மானம் எடுக்க முடியாது. அவ்வாறு அவசரமான தீர்மானத்திற்கு வருவதற்கான அழுத்தத்தை சிலர் கட்சிக்குள் இருந்து கொண்டும், சிலர் கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டும் கொடுப்பதை நாம் அனுமதிக்கவும் முடியாது. அந்த அவசரத்தின் பின்னணியை நாம் அறியாமலுமில்லை. மக்களின் மன நிலையை கட்சி உள்வாங்குகின்ற அதேநேரம், தலைமைகளுக்கு இருக்கின்ற பொறுப்போடு, தேர்தலுக்குப் பின்னர் சமூகம் எதிர்நோக்கக் கூடிய சவால்களை முறியடிப்பதற்கான வேலைத் திட்டங்களையும் நன்கு திட்டமிட்ட பின்னரே, எந்தத் தீர்மானத்திற்கும் வர வேண்டும்.
மிஹிந்தவுக்கும், மைத்திரிக்கும் தேவைப்படும் அதிகாரத்திற்காக முஸ்லிம் சமூகம் பலிக்கிடாவாக்கப்பட்டு விடக்கூடாது. இதுவரை காலமும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த ஜனாதிபதியின் காலத்திலும் முஸ்லிங்களுக்கு அநியாயங்கள் இடம்பெறாமல் இல்லை. எல்லாக் காலங்களிலும் எல்லா ஜனாதிபதிகளின் காலத்திலும் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யப்பட்டுத்தானிருக்கிறது என்ற அனுபவப் பாடம், முஸ்லிம்களையும் முஸ்லிம் காங்கிரஸ்யையும் வழிநடாத்த வேண்டும். எனவே, அவசரப்படாமலும், அதே நேரம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து விடாமலும் நாம் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். அல்லாஹ் நமக்குத் தந்திருக்கும் அமானிதத்தை சரியாக நாம் காப்பாற்ற வேண்டும். நமது நலங்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, சுயநலன்களுக்காக நாம் முடிவெடுத்தால், நம்மையும் நமது இந்தக் கட்சியையும் அல்லாஹ் அழித்து விடுவான். இதனை மனதில் வைத்துக் கொண்டு முடிவெடுங்கள். இது சமூகம் சார்ந்த விடயம், இதில் தவறு விட்டால், மன்னிப்பே இல்லாத தண்டனை நம் எல்லோருக்குமுண்டு.” என்ற கருத்துப் படவே பேசினேன். ஆனால், அதனை திரிபுபடுத்திக் கூறியுள்ளார்கள்.
அதுமட்டுமல்ல, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடந்த உயர்பீடக் கூட்டத்திலும் அவசரப் பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று நான் கூறிய கருத்தை, இழிவான அரசியல் எண்ணம் கொண்டவர்கள் திரிபு படுத்திக் கூறி, சமூக வலைத்தளங்களிலும், இணையதள செய்திகளிலும் எனக்கு மாசு கற்பித்து, மகிந்தவை ஆதரிப்பதாக கூறி அபாண்டம் சுமத்தினர். மக்களை பலி கொடுத்தாவது அவர்களின் அரசியல் நலன்களை அடைந்து கொள்ளுவதற்காக, கட்சியையும் தலைவரையும் பயன்படுத்துவதற்கும் பிழையாக வழிநடாத்துவதற்கும், நான் தடையாக இருப்பதற்காக, என்னை அழிக்க முயற்சிக்கின்றனர். அல்லாஹ்வும் மக்களும் என்னோடு இருக்கும் வரை, நான் தலைவரையும் கட்சியையும் யாரும் பிழையாக வழிநடாத்த விடமாட்டேன்.