Breaking
Wed. Nov 13th, 2024

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு செல்வாரா என தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தரும் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் சவால் விடுத்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் வென்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் இன்று தெரிவித்தார்.

தென் கிழக்கு பல்கலைக்கத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்த நிலையிலேயே முன்னாள் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்புமனுப் பத்திரத்தில் கையொழுத்திட்டுள்ளமை சட்டவிரோதமான செயற்பாடாகும் எனவும் அவர் நேற்று சம்மாந்துறையில் இடம்பெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக  முன்னாள் உப வேந்தரும் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் வினவிய போதே இந்த சவாலினை விடுத்தார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு அம்பாறை மாவட்டத்தில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் எனது வெற்றி கடந்த சனிக்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்ற மாபெரும் கூட்டத்துடன் உறுதிப்படுத்தப்பட்டது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேவையற்ற வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்.

நான் சட்ட ரீதியான முறையிலேயே இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். அவ்வாறு நான் சட்ட ரீதியற்ற முறையில் போட்டியிட்டிருந்தால் அவர் நீதிமன்றம் செல்ல முடியும். நானும் அதற்கு தயாரகவுள்ளேன். சட்ட முதுமானியான அமைச்சர் ஹக்கீமினைப் போன்று எமது கட்சியிடமும் பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் உள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் செல்லாது, மக்கள் மத்தியில் வீண் வதந்திகளை பரப்பி மக்கள் காங்கிரஸிற்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களிப்பதனை நிறுத்த முயற்சிக்கின்றார்.

இந்த வதந்தியினை ஒருபோதும் அம்பாறை மாவட்ட மக்கள் நம்பமாட்டார்.
அத்துடன் இந்த வதந்திகளை நம்பமால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் தனக்கும் இந்த தேர்தலில் வாக்களித்து உறுதிசெய்யப்பட்ட தனது வெற்றியை மேலும் உறுதிப்படுத்தவும்” என்றார்.

நன்றி -Vidiyal-

Related Post