அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்க அதிபராகும் தகுதி மற்றவர்களை விட ஹிலாரி கிளிண்டனுக்கு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் ‘‘ஹிலாரி வெள்ளை மாளிகைக்கு செல்ல அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவர் மக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் தன்மை கொண்டவர். ஹிலாரி தமது கொள்கையில் இருந்து பின்வாங்கியதில்லை. என்னை விடவும், பில் கிளிண்டனை விடவும், மற்ற ஆண், பெண்களை விடவும் அமெரிக்க அதிபராகி சேவையாற்றும் தகுதி படைத்தவர்” என ஹிலாரியை புகழ்ந்தார்.
ஒபாமாவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.