Breaking
Thu. Oct 31st, 2024
வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா –

வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கென கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் வரை பல்வேறு நிறுவனங்கள் நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரான றிசாத் பதியுதீன் இதில் அதிகமான வீடுகள் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வவுனியா அல்-அரபா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத் திறப்புவிழாவிலும்,வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்விலும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் எம்.புஹாரி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது.
இந்த பாடசாலையின் பெறுபேறுகளை பார்க்கின்ற போது மிகவும் மகிழ்சியாக இருக்கின்றது.முஸ்லிம் மாணவர்கள் பெரும்பான்மையாக கல்வி பயிலும் இந்த பாடசாலையில் பணியாற்றும் தமிழ்  ஆசிரியர்கள் சிறந்த கல்வியினை இந்த மாணவர்களுக்கு போதித்துள்ளதை காணமுடிகின்றது இதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த வருடம் கிடைக்கப் பெற்ற 5000 வீடுகளை பகிர்ந்துகொடுப்பது தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் மிகவும் நேர்மையாக அவற்றை பகிர்ந்து கொடுத்துள்ளேன்.
இந்த வீடுகளில் 500 சிங்கள மக்களுக்கும்,1000 வீடுகள் முஸ்லிம்களுக்கும், 3500 வீடுகள் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சில அரசியல்வாதிகள் இந்த உண்மையினை மறைத்து 100 வீதம் இன்னும் தேவையுள்ள முஸ்லிம்கள் இருக்கையில் 120 வீதமான வீடுகளை  முஸ்லிம்களுக்கு வழங்கியுள்தாக பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.இதற்கு சில ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து என்னை ஒரு இனவாதியாக காண்பிக்கின்றனர்.
அப்படி நான் ஒரு இனத்தை சார்ந்தவர்களுக்கு பணியாற்றியிருந்தால் எவ்வாறு இந்த 3500 வீடுகளை தமிழ் மக்கள் எவ்வாறு பெற்றிருப்பார்கள் என கேட்கவிரும்புகின்றேன்.நான் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் சொல்லுகின்ற விடயம் தான் முழு மனித சமூகத்துக்கும் உதவி செய்யுமாறு என்பதை இங்கு கூறவிரும்புகின்றேன்.
கடந்த 30 வருடங்களாக நாம் அனுபவித்த துன்பங்களை மறந்துவிட முடியாது.அந்த நிலை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது.அகதி முகாம் வாழ்க்கையை அனுபவித்தவனில் நானும் ஒருவன்.அதன் பின்னர் எனது உயர் கல்வியினை தொடர்ந்தேன் இவ்வாறு கிடைக்கின்ற நேரத்தை கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டேன்.வறுமையினை காரணம் காட்டி பிள்ளைகளுடைய கல்விக்கு தடையினை ஏற்படுத்திவிடாதீர்கள்.அதே போல் மாணவர்கள் ஒழுக்கம் உள்ளவர்காளக இருக்க வேண்டும்.கல்விக்கு பிரதான அடையாளம் ஒழுக்கமாகும். ஏனெனில கல்வி என்பது அழியாச் சொத்து,அதனை வாழுகின்ற போது சமூக மே்பாடுகளுக்கு பயன்படுத்தும் போது அதற்கான கூலிகள் ஈருலகிலும் கிட்டும்.
மாணவர்களின் திறமைகள் நெறிப்படுத்தப்படுகின்ற போது அவர்கள் சிறந்த இடத்தை அடைவார்கள்.இந்த பாடசாலையின் விளையாட்டுப்போட்டி மிகவும் நெறிப்படுத்தலுடன் நடத்தபப்ட்டதை பாராட்டுகின்றேன்.
வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்கள் இந்த பாடசாலையின் கட்டிடத்துக்கும்,ஏனைய பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் உதவி செய்துள்ளார்.அதே போல் வடமாகாண கல்வி அமைச்சரும் இந்த பாடசாலை கட்டிடத்துக்கு உதவி செய்துள்ளார் அதற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன்.
அமைச்சரின் சேவையினை பாராட்டி அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக,தெற்கு வலயக் கல்வி பணிப்பாளர்,உள்ளிட்ட அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள்,மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Post