Breaking
Mon. Jan 13th, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று (27) இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளும் மதவாதிகளும், சஹ்ரானின் தாக்குதலுடன்  என்னை தொடர்புபடுத்தி, எப்படியாவது கூண்டிலடைக்க வேண்டுமென சதி செய்து வருகின்றனர்.

கடந்த அரசில், இந்தத் தாக்குதலுடன் என்னை சம்பந்தப்படுத்தி, குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, தற்போதிருக்கும் பொலிஸ்மா அதிபரே, பொலிஸ் விஷேட குழுவொன்றை நியமித்து, இது தொடர்பில் விசாரிக்குமாறு தனது அதிகாரிகளைப் பணித்திருந்தார்.

இது தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும் அவகாசம் வழங்கி, பகிரங்க அழைப்பொன்றையும் விடுத்தார். “ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் பொலிஸில் முறையிடுங்கள்” என்றார். அதுவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஊடாக, ஏழு நாட்கள் வரையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அதன் பிறகு விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அதுரலியே ரத்ன தேரர், எஸ்.பி.திஸாநாயக்க உட்பட இனவாதிகள் பலர், என் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை கையளித்தனர். அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்பட்டன. பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இப்போதிருக்கும் அதே பொலிஸ்மா அதிபரே, அன்று எழுத்துமூலம் விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தார்.

அந்த அறிக்கையின் பிரகாரம் “ரிஷாட் பதியுதீனுக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடனோ, வேறு எந்த பயங்கரவாத சம்பவத்துடனோ, எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது” என  எழுத்துமூலம் அறிவித்திருந்தார். அது பாராளுமன்றத்தில் அறிக்கையாகவும் வெளிவந்திருக்கின்றது.

அவ்வாறிருந்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்ற இந்த 15 மாத காலத்தின் பின்னர், இப்போது தேர்தல் நெருங்குகின்ற வேளை, என்னை இலக்கு வைத்து விசாரணைக்கு அழைத்தனர். அதன் பின்னர், நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு சென்றபோது, 10 மணித்தியாலங்கள் வரை என்னை அங்கு வைத்திருந்து, நான் முன்னர் பதவி வகித்த அமைச்சு மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலும், மன்னாரைச் சேர்ந்த அலாவுதீன் மற்றும் அவர் கட்சியுடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் துருவித்துருவி விசாரித்தனர். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். அன்றைய தினம், இரவு எட்டு மணிக்கே என்னை வெளியேற அனுமதித்தனர். அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து, மீண்டும் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் நான் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால் நாடளாவிய ரீதியில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க வேண்டியதை தெரிவித்தேன். எனது பிரச்சார நடவடிக்கைகள் இதனால் தடைப்படுகிறதெனக் கூறி, பதினைந்து மாதங்கள் வாளாதிருந்த நீங்கள், தேர்தல் முடியும்வரை பொறுத்திருந்து, அதன் பின்னர் அழைக்குமாறு கோரினேன். அதற்கு அவர்கள் இணங்காததினாலேயே, தேர்தல்கள் ஆணையகத்தில் முறையிட்டேன். எனது முறைப்பாட்டை கருத்திலெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களும் கையெழுத்திட்டு, எனது நியாயமான கோரிக்கையை ஏற்று, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்..

எனினும், அவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றனர். அதன் பின்னர், என்னை இன்று வவுனியாவில் விசாரணைக்கு அழைத்தார்கள். கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான பதில் கொடுத்தேன்.

எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென பொலிஸுக்கு நன்கு தெரியும், மக்களுக்கும் தெரியும். ஏன் முழு நாட்டுக்கே தெரியும். ஏற்கனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவும், அதனை உறுதிப்படுத்திவிட்டது” இவ்வாறு முன்னாள் அமைச்சர் தெரிவித்தார் என்றார்.

“இதனை நீங்கள் அரசியல் பழிவாங்கல் என்று கருதுகிறீர்களா?” என்ற ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், “நிச்சயமாக இதனை ஒரு அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கின்றேன்” என்றார்.

“மஹிந்தவுடன் இருந்துவிட்டு மைத்திரிக்கு ஆதரவளித்தது காரணமென கருதுகின்றீர்களா?” என்ற மற்றொரு ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர், “ஆம், அதுவும் ஒரு காரணம்தான். அத்துடன் 52 நாள் சட்டவிரோத அரசாங்கத்துக்கு நான் கைகொடுக்கவில்லை என்பதும் இன்னுமொரு காரணம். இவை எல்லாவற்றையும் சேர்த்துவைத்தே  இந்தத் தண்டனைகள் தரப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

Related Post