இன்று எம் சமூகத்தின் மீள் குடியேற்றம் இனவாத அடிப்படையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நேரத்தில் தான் அம்மக்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அடி மட்டத்திலிருந்து அந்த மக்களோடு மக்களாக துன்பங்களைப் பகிர்ந்து, வளர்ந்த நான் என் மக்களளுக்காக முன் நிற்காமல் சவால்களைக் கண்டு ஓடி ஒளியும் ரகமில்லையென தெரிவித்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்.
வில்பத்து வனப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அண்மைக்காலமாக தொடரப்படும் ஊடகப் பிரச்சாரங்களை முறியடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்கு நேரடியாகவே ஊடகவியலாளர்களையும் அழைத்துச் சென்ற போதிலும் இனவாத அடிப்படையே மேலோங்கி இருப்பதால் சிங்கள ஊடகங்கள் இதை பெரிது படுத்தி யுத்தத்தால் அல்லல்பட்டு வீடு வாசல் இழந்து, உள் நாட்டிலேயே இடம்பெயர்ந்து துன்பப்படும் மக்களின் எதிர்காலத்தை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் அந்த மக்களுக்காக முன்நின்று போராடும் என் மீதும் அதிலும் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சேறு பூசப்படுகிறது என சுட்டிக்காட்டிய அமைச்சர்….
இப்பிரச்சினைகளைத் தூர விலகி நின்று நியாயம் கேட்பதை விட நேரடியாக பிரச்சினைகளுக்குரியவர்களின் இடத்திற்கே சென்று அவர்கள் முன்னிலையிலேயே எமது நியாயங்களை எடுத்துரைக்க முடிவெடுத்ததன் விளைவே இன்றைய ஹிரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி என்று விளக்கியிருந்தார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான தேவை, அதிலும் குறிப்பாக சிங்கள மொழியில் இடம்பெறப் போகும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதன் தேவையென்ன என அமைச்சரிடம் வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதே நல்ல போராளிக்கு அழகு. நான் என் சமூகத்துக்கான போராளி, அவர்கள் மீள் குடியேற்றத்திற்காக தூய்மையான உள்ளத்துடன் பணியாற்றுகிறேன், எனவே யாரையும் எங்கும் சந்திக்க நான் அஞ்சத் தேவையில்லை. இந்த விடயத்தைப் பெரிது படுத்த ஹிரு தொலைக்காட்சியின் பின்னணியில் இயங்கும் சூழல் விற்பன்னர் இன்றைய நிகழ்ச்சிக்கு வருகிறார்.
அவரை அங்கு சந்திப்பது தான் முறையானது. அவர்களுக்குப் புரியும் மொழியில் அதற்கான பதிலைக் கொடுப்பதுதான் தேவையானது. ஏனெனில் இது ரிசாத் பதியுதீன் எனும் தனிப்பட்ட மனிதனுடைய விடயமில்லை, ஆயிரக்கணக்கான மக்களின் அவர்கள் வாழ்க்கை சார்ந்த விடயம். எனவே தான் நிகழ்ச்சியில் நேரடியாகவே கலந்து கொள்ள முடிவெடுத்தேன் என தெரிவித்தார். குறித்த சர்ச்சை தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரடியாக உரையாடினீர்களா என வினவப்பட்ட போது, ஆம்! உரையாடினேன்.
ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை எனவே அவரது நிலைப்பாட்டை முழுமையாக அறியமுடியவில்லை. இருந்தாலும் நியாயத்தை எடுத்துரைக்கத் தயங்கத் தேவையில்லை. அவர் நல்ல முடிவை எடுப்பார் எனவே நம்பலாம். ஆனாலும், அவரும் புதிய குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் எனும் தொனியில் பேசியிருப்பதானது இவ்விவகாரம் முழுமையாக அவரது கவனத்திற்குச் சென்றுள்ளதா எனும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
எதுவாகயினும், இன்றைய நிகழ்ச்சியில் இதற்கான முழுத் தெளிவினை, இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்தளவு வழங்குவேன். சிங்கள மொழியிலான முழு நேர நிகழ்ச்சியொன்றில் நான் கலந்து கொள்வது இதுவே முதற்தடவை. எனினும், இவ்வாறான சவால்களைக் கண்டு நான் ஓடி ஒளிய மாட்டேன் எனவும் தெரிவித்த அவர், சமூக அக்கறையுள்ளவர்களின் துஆப் பிரார்த்தனை தனக்காக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.