-உலக சுகாதார நிறுவனம்-
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா வைரஸ் மிக வேகமாகபரவுவதால் அடுத்த சில வாரங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோர் வைரஸால் தாக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு நேற்று (08) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் பரவியுள்ளது. அதில் லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது. இதுவரையில் எபோலா வைரஸ் தாக்கி கினியா, சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியாவில் இதுவரை 2100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் மருத்துவ உதவிகளை மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்க முன்வந்துள்ளது. இந்த அதிவேக அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட நாடுகளான மேற்கு ஆபிரிக்க நாடுகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டுமென சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
எபோலா வைரஸ் தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மற்றொரு நாடான செனகலுக்கும் பரவியுள்ளது. லைபீரியாவின் தற்போதய நிலை பற்றி உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிடும் போது லைபீரியாவில் எபோலா மருத்துவ மையங்கள் புதிதாக திறக்ககப்பட்டு வருகின்றன. எத்தனை மையங்கள் திறந்தாலும் உடனே அவை எபோலா நோயாளிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. அண்மையில் மூன்று வாரங்களுக்குள் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் எபோலாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் சுகாதார தொழிலாளர்கள் உட்பட ஒரு வைத்தியரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி அண்மையில் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்தந்த இடங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள சுகாதார சேவையாளர்களுக்கு முதலில் தக்க பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.