Breaking
Fri. Dec 27th, 2024

மேற்கு ஆபிரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் எதிர்வரும் காலத்தில் எபோலா நோய் பரவலைத் தடுக்கும் முகமாக  100 மில்லியன் டொலர்கள் செலவில் அவரச நிதியம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அவசர நிதியம் இனிவரும் காலங்களில் உடனடியாக எபோலா நோயை எதிர்த்து சமாளிப்பதற்கு உதவும் என  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்த கூட்டமொன்று நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மார்கரெட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் சுகாதாரம் தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து கண்டறிந்து தீர்ப்பதில் உலக சுகாதார ஸ்தாபனம் சுமார் 70 வருட வரலாற்றினைக் கொண்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா தொற்று நோயால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளைக் கண்டபிறகு, எமது நிறுவனம் அதன் தாக்கத்தை உணர்ந்துள்ளது.

அந்த நோயை எதிர்த்து போராடுவதற்கு எமக்கு இருந்த வலிமையை விடவும் பத்து மடங்கு மேலதிகமாக தேவைப்பட்டது.எபோலா நோய் தாக்கம் போன்ற ஒரு சூழலை நாங்கள் இதுவரை எதிர்கொண்டது இல்லை. தற்போது  அவ்வனுபவங்களைப் பெற்ற நாங்கள் இதன் மூலமாக புதியதொரு நிகழ்ச்சித்திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளோம். அதன் மூலம் நோயின் தாக்கத்தினையும் தாக்கத்துக்குட்பட்டவர்களையும் ஒவ்வொரு 24, 48, மற்றும் 72 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை அவதானிக்கும் புதிய முறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எபோலா தொற்று பரவ ஆரம்பித்தது. இதனால் சுமார் 11,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post