இஸ்லாமிய சமய நடவடிக்கைகளுக்காக நாம் முரண்படவில்லை. இந்த நாட்டை இஸ்லாமிய மயப்படுத்தும் முயற்சிகளுக்காகவே நாம் போராடினோம். இப்போதும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் . பெளத்த சிங்கள மக்களை பாதுகாக்க தாம் புதிய அரசியல் பாதையினை உருவாக்கவுள்ளதாகவும், தனித்துவ சிங்கள தலைவராக உருவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொது பல சேனா பெளத்த அமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,
இஸ்லாமிய முரண்பாட்டு கோட்பாடொன்று பலமடைந்த நிலையில் நாம் தான் மஹிந்த ராஜபக்ஷவிற்கு துணையாக நின்றோம் . ஆனால் இன்று அரசியல் சுயநலத்திற்காக அவர் எங்களை குற்றவாளியாக்கி அதன் மூலமாக மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார் . சிங்கள மக்கள் மஹிந்த அரசாங்கத்தை முழுமையாக நம்பிய போதிலும் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டனர் . ஆனால் தமக்கான தலைவர் மஹிந்த என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் அம்மக்கள் இருந்தனர். எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அரசாங்கம் தோல்வியடைய அவரின் அவசர செயற்பாடுகளும் அவரை சுற்றியிருந்த கூட்டமுமே காரணம் .
மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டுகின்றார் . ஆனால் எமது அமைப்பு மக்களை மட்டுமே இலக்கு வைத்து செயற்பட்டதே தவிர அரசியலை இலக்கு வைக்கவில்லை. எனினும் நாம் இப்போது எமக்கான புதிய பாதையினை ஆரம்பித்துள்ளோம்.
இத்தனை காலமாக பொதுபல சேனா அமைப்பு சிங்கள கொள்கையினை பலப்படுத்த என்ன செய்ததோ அதே செயற்பாடுகளை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். எமக்கான புதிய அரசியல் பாதையினை ஆரம்பித்து அதனூடாக சிங்கள பெளத்த மக்களுக்கான தனித்துவ தலைமையினை ஆரம்பிப்பதே எமது நோக்கமாகும். அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம். நாம் யாரையும் ஆதரிக்கவோ அல்லது யாருடைய துணையுடனும் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை .
இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் .
எனவே இப்போது நாம் எடுத்திருக்கும் முடிவுகள் மிகவும் ஆரோக்கியமானது மட்டும் அல்லது சிங்கள பெளத்த மக்கள் எதிர்ப்பார்க்கும் முடிவும் இதுவே . அதேபோல் எமது புதிய பயணத்தில் தமிழ் ,முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்க நாம் தயார் . அதேபோல் எமது செயற்பாடுகள் யாருக்கும் கட்டுப்பட்டதல்ல , நாம் யாருக்கும் அடிபணிந்து செயற்படப் போவதும் இல்லை என்றார்.