Breaking
Fri. Nov 15th, 2024

சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பது இப்பிரதேசத்தின் பூர்வீக குடி மக்கள் என்ற அடிப்படையில் எமது வாழ்வாதாரத்தையும் இயல்வு வாழ்வையும் தமது அடையாளத்தையும் இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாகும்.

எனவே சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மூதூர் கிழக்கைச் சேர்ந்த பூர்வீக பழங்குடியின மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர்.

மூதூர் கிழக்கைச் சேர்ந்த பூர்வீக பழங்குடியின மக்கள் நேற்று 7ஆம் திகதி சந்தோஷபுரம் சிவசக்தி வித்தியாலயத்திற்கு முன் தமது கவனயீர்ப்பை நடாத்தி கையெழுத்து எடுக்கபட்ட கடிதம் ஒன்றையே இன்று அனுப்பி வைத்துள்ளனர்.

அக் கடிதம் பின்வருமாறு,

அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்கு.

இலங்கைத் தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாகக் எம்மைக் கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர் மகியங்கனையை அண்டிய பகுதிகளில் ஒரு பிரிவாகவும் நாம் வாகரை, வெருகல் மற்றும் மூதூரை அண்டியும் சுமார் 35 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியிலும் வாழ்ந்து வருகின்றோம். எமக்கான பூர்வீக மொழி ஒன்றை நாம் பேச்சு வழக்கில் கொண்டுள்ளோம். எம்மில் சிலர் இன்னும் அதனைப்பேசி வருகின்றனர். ஆனாலும் நாம் தமிழ் மொழியையே பேச்சு மொழியாகக் கொண்டுள்ளோம்.

கடந்து போன வன்முறைச் சூழல் முழுவதும் யுத்தத்திற்கும் வறுமைக்கும் இடையில் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து தற்போது தான் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம்.

எமது கிராமங்களைச் சுற்றியிருக்கும் வனப்பகுதியே எமக்கான பிரதான ஜீவனோபாய மார்க்கம் என்பதை தாங்கள் அறிவீர்கள். நீண்ட நெடுந்துயர் வாய்ந்த எங்கள் வாழ்க்கைக் காலம் தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்பு மாற்றமடையும் என்கிற நம்பிக்கையில் எங்கள் நாளாந்த தொழில்களில் முனைப்புடன் ஈடுபடுகின்றோம்.

உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வேலிகள் போடப்பட்டீருந்த எங்களுக்குச் சொந்தமான வனப்பகுதி தங்களது ஆட்சிக் காலத்தில் எங்களுக்கே மீளக்கிடைக்கப் போகிறது என்றும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

ஆனாலும் கடந்த ஒரு மாத காலமாக எமது பகுதியில் மிகவும் பாரதூரமான செயற்பாடுகள் நடைபெற்று வருவது எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அனல்மின் நிலையம் ஒன்று இப்பகுதியில் அமைக்கப்படப் போவதாகவும் இனிமேல் எங்களால் சமையலுக்கான விறகைக் கூட எமது வனப்பகுதியிலிருந்து பெறமுடியாதென்றும் கூறி எங்கள் பகுதியைச் சுற்றி பாரிய வேலிகளை அமைத்து வருகிறார்கள்.

தற்போது அடைக்கப்படும் இப்பகுதியின் வனம் முழுவதும் காலம் காலமாக எமது ஜீவனோபாயத்திற்கான வனப்பகுதியாகும்.

எங்களது குழந்தைகள் வறுமையிலும் செம்மையான எதிர்காலத்தைப் பெறவேண்டும் என்பதற்காக நாங்கள் முயற்சித்து எங்கள் பகுதியில் கட்டுவித்த கிறவல்குழி சிவசக்தி வித்தியாலயத்தின் வேலியோரமாக தற்போதைய வேலி அமைக்கப்படுகின்றது.

இம்முயற்சிகள் எமது இருப்பைக் கேள்விக்குறியாக்குவதுடன் எமது சந்ததியினரின் எதிர்காலத்தையும் சேர்த்து மண்தோண்டிப் புதைக்கும் நடவடிக்கையாகும். இம்மின்சார நிலையம் அமைப்பது தொடர்பாகவோ அல்லது அதனது பாதக சாதக அம்சங்கள் தொடர்பாகவோ எந்த ஒரு அரச அலுவலரும் இது வரையில் எம்முடன் பேசவில்லை.

எனவே நல்லாட்சிக்கான ஆணையை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பெருந்தலைவர் என்கிற வகையிலும், இந்த நாட்டின் உழைக்கும் ஏழை மக்களின் வாழ்க்கையை நன்குணர்ந்தவர் என்கிற வகையிலும் இந்த நாட்டிலே வாழுகின்ற பழங்குடியினர் ஏனைய நாடுகளைப் போலவே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதை நன்குணர்ந்தவர் என்கிற வகையிலும் எமக்கான வனப்பகுதியை எமக்கென மீட்டுத்தந்து எமது ஜீவனோபாயத்தையும் எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் செயற்பாடுகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்.

மேலும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதுடன் இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இப்பகுதி விவசாயிகளையும் மீனவர்களையும் கால்நடை வளர்ப்போரையும் எம்முடன் சேர்ந்து நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என தங்களை மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

என இக்கடிதம் அமையப் பெற்றுள்ளது.

By

Related Post