Breaking
Sun. Dec 22nd, 2024

எமது கடல் எல்லைக்குள் எந்தவொரு காரணம் கொண்டும் எந்தவொரு வெளிநாட்டவரையும் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சரான ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவித்துள்ளார்.

மன்னார் குடாவில் மீன் விருத்தி செய்வதற்கு பல காலங்கள் செல்வதால் மூன்று வருடத்திற்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு இடைக்கிடை அனுமதி வழங்குமாறு பாரதீய ஜனதா கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியம் சுவாமி நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மாநாட்டில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன பதிலளித்துள்ளார்.

அதில், “30 ஆண்டுகள் துன்பங்களை அனுபவித்து தற்போது தான் எமது மீனவர்கள் கடலுக்கு சென்று வருமானத்தை பெற்றுக் கொள்கின்றனர். எதிர்காலத்தில் 50 வீதமாக அதிகரிப்பதே எமது வேலைத்திட்டமாகும். ஜனாதிபதி எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் கடந்தாண்டு டிசம்பர் மாதமாகும் போது 23 வீதமாக மும்மடங்கால் அதிகரிக்க முடிந்தது. இன்னும் ஓரிரு வருடங்களில் 50 வீத இலக்கை அடைவோம்.

இதற்கு இருக்கும் பாரிய தடையாக இந்திய மீனவர்களின் வருகையே காணப்படுகின்றது. ஆகவே எவருக்கும் எமது கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க இடமளிக்க போதில்லை. அவ்வாறு வர விரும்புகின்றவர்கள் எமது நாட்டுடன் கலந்துரையாடி முதலீட்டு நடவடிக்கைகள் மீது வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு அல்லாது இந்திய மீனவர்களுக்கு எமது கடலை திறந்து விட முடியாது. எமது பொருளாதார வலயத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது“ என்றுள்ளார்.

Related Post