Breaking
Fri. Nov 15th, 2024

– எஸ்.அஸ்ரப்கான் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கல்முனை மண்ணில் இன்ஷா அல்லாஹ் மக்கள் பங்களிப்புடன் நாம் எத்தனை தடைகள் வந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவோம். இன்று எமது கட்சியின் அம்பாரை மாவட்ட வருகையானது மு.கா விற்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கின்றது. என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் தேர்தல் வேட்பாளருமான வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

கட்சியின் சார்பாக கல்முனையில் 7 ஆம் இலக்கத்தில் தேர்தலில் போட்டியிடும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்களை ஆதரித்து நேற்று இரவு (03) கல்முனை கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியபோது மு.கா. ஆதரவாளர்களால் பல்வேறு குழப்பம், கூச்சல்களுக்கு மத்தியில் வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் உரையாற்றும்போது,
மக்கள் தெளிவாக இனம் கண்டுள்ளார்கள். இந்த கல்முனை மண்ணில் நாங்கள் பிறக்கவில்லையா எங்களுக்கு உரிமையில்லையா எங்களுடைய ஊரில் எமது தெளிவான கருத்துக்களை சொல்ல முடியாதா இந்த மண்ணில் இருந்து கொண்டு வை.எல்.எஸ். ஹமீடினால் பேச முடியாதா எதற்காக கேவலமாக இவர்கள் கூச்சலிட வேண்டும். எமது கருத்தை சொல்லவிடாமல் தடுக்க வேண்டும். நீங்கள் மட்டும்தான் இந்த மண்ணில் பிறந்திருக்கின்றீர்களா நீங்கள் பெற்ற வாக்குகளினால் இந்த மண் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றதா உங்களால் இந்த மண்ணுக்கு செய்யப்பட்ட அபிவிருத்திதான் என்ன.

இவ்வாறு குழப்புவதால் மட்டும் மக்களை திசை திருப்ப முடியாது. எமது எழுச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் இவர்கள் கூக்குரல் இடுகிறார்கள். அவர்களை நாம் நொந்து கொள்ள மாட்டோம். இன்று கல்முனை மக்கள் தெளிவடைந்திருக்கின்றார்கள். அவர்கள் இந்த வங்குரோத்துக்காரர்களுக்கு சிறந்த பாடத்தை இம்முறை புகட்டுவார்கள். அது மட்டுமல்லாது மயில் அம்பாரை மாவட்டத்தில் பெரும் வெற்றியை பெறும் என்பதை நிதர்சனமாக மக்கள கண்டுகொண்டிருக்கின்றார்கள்.

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்தான் இந்த கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தைிற்கு அடித்தளமிட்டார். அதனை கட்டி முடிப்பதற்கு கூட திராணியில்லாத அரசியல் தலைமைகள்தான் நான் நேசிக்கின்ற தலைமைகள். இத்தருவாயில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்தான் இதனை அப்போதைய அமைச்சர் பஷீலுடன் தொடர்புகொண்டு அரசாங்க நிதியில் இதனை கட்டுவதற்கு காரணமாயிருந்தார் இது மறுக்க முடியாத உண்மையாகும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகளில் அரச நிதியில் கட்டப்பட்ட வீடுகள் என்றால் இந்த கல்முனை பிரதேசத்தில் கட்டப்பட்ட வீடுகள் மாத்திரம்தான் உண்டு. மற்ற அனைத்தும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கட்டப்பட்டதாகும். இந்நிலையில் மு.கா. அரசாங்கத்திற்குள் வந்தபோது அமைச்சர் றிஷாட் இங்குள்ள பிரச்சினையை பார்க்க கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார்கள். ஆனாலும் அமைச்சர் றிஷாட் அப்போது முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் இந்த கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் இருந்திருக்காது மக்கள் தெருவில் நின்றிருப்பார்கள். இதுதான் உண்மை நிலை இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்கு மனிதன் நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தமாட்டான் என்று இஸ்லாம் சொல்லுகின்றது. நாங்கள் கலிமா சொன்னவர்கள் இந்த அரசியல் எவ்வளவு காலத்திற்கு எம்மிடம் இருக்கப்போகிறது. என்றோ ஒருநாள் நாம் இறைவனிடத்தில் போக போகின்றோம். எனவே நமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி என்பன நமக்கு தரப்பட்ட அமானிதங்கள் அதற்கு அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனவே நாம் அனைவரும் மக்களுக்காக சேவை செய்வோம் அல்லாஹ்வை பயந்து கொள்வோம்.

அன்று மறைந்த தலைவர் தியாகத்தை ஊட்டி மு.கா. வை வளர்த்தாரோ அந்த நோக்கம் இன்று தவிடுபொடியாகிவிட்டது. மரணிப்பவர்கள் என்னுடன் வாருங்கள் என்று எவ்வாறு தியாகத்தின் அடிப்படையில் கட்சியை வளர்த்தார்களோ அதற்கு மாற்றமாக இன்றைய தலைமைத்துவம் பொய்களையும், ஏமாற்றுக்களையும் ஊருக்கு ஊர் ஒவ்வொரு பேச்சு என்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றார். இன்று மாபெரும் முஸ்லிம்களின் அடையாளம் மு.கா. கட்சியின் தேசிய தலைமை ஐக்கிய தேசியக் கட்சியின் கலகெதர அமைப்பாளராக இருக்கின்றார். ஒரு கட்சியின் தலைவர் இன்னும் ஒரு கட்சியின் அமைப்பாளராக இருப்பது வரலாற்றில் முதல் தடவையான ஒன்றாகும். ஏன் முஸ்லிம்களை இவர் இவ்வாறு ஏமாற்றுகின்றார். முஸ்லிம் சமூகத்திற்காக, தனித்து இயங்குவதற்காக தன்மானத்தோடும், சுய கௌரவத்தோடும், பாராளுமன்றில் முழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் தலைவர் மறைந்த தலைவரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தலைமையைக் கொண்ட கட்சிக்கு அமைப்பாளர் என்றால் இது எவ்வளவு ஏமாற்று என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஊருக்கு ஊர் வெவ்வேறு விதமான பேச்சு ஒவ்வொரு ஊருக்கும் தேசியப்பட்டியல் தருவோம் என்ற பொய் வாக்குறுதிகள் சொல்பவர்களை மக்கள் புறம்தள்ளி அகில இலங்கை ரீதியில் எமது கட்சி இலங்கை முஸ்லிம்களை அரவணைக்க எடுத்திருக்கும் விடுதலைப்பயணத்தில் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அம்பாரை மாவட்ட மக்களையும் ஒன்றிணையுமாறு வேண்டுகின்றோம் என்றார்.

Related Post