Breaking
Fri. Nov 15th, 2024

-நாச்சியாதீவு பர்வீன் –

விளையாட்டாக கல்லெறிந்தாலும் அல்லது விளையாட்டு அமைச்சர் கல்லெறிந்தாலும் எமது சேவைகளை அம்பாறையில் தொடரும். ஒரு அரசியல் கலகம் என்ன வேலையை செய்ய வேண்டுமோ அந்த வேலையை இந்த சமூகத்திற்காக எமது கட்சியும்,அதன் தலைமையும் கனகச்சிதமாய் செய்து வருகின்றது. அந்த விடயத்தில் நாங்கள் மிகத்தெளிவாகவே இருக்கிறோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஎஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கல்முனைத் தொகுதியின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் தலைமையில் கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

ஒரு அரசியல் கட்சி என்பது அது குர்ஆன் அல்ல, அல்லது அது நமது கிப்லாவுமல்ல, ஒரு அரசியல் கட்சி நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதனைவிட்டு விலகி,நமக்கு பிடித்த நமக்கு சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கையை தருகின்ற கட்சியில் சேர்ந்து இயங்குவது சாதாரணவிடயமாகும்.இது கடந்த கால அரசியல் வரலாற்றை அவதானிக்கின்ற போது நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். நமக்கு ஒரு விளையாட்டுக்கழகத்தை பிடிக்கவில்லை என்றால் இன்னொரு விளையாட்டுக்கழகத்தில் இணைந்து கொள்வதும்,ஒரு மஸ்ஜிதில் உள்ள மெளலவியின் பின்னால் நின்று தொழ பிடிக்கவில்லை என்றால் இன்னொரு மஸ்ஜிதிற்க்கு சென்று தொழுவதென்பதும், இவ்வாறே ஒரு குழுவில் இருந்து மாற்றுக்கருத்துக்களுக்காக இன்னொரு குழுவிற்கு செல்வதெல்லாம் அங்கீகரிக்கப்படுகின்ற போது தனக்கு பிடித்த ஒரு கட்சியுடன் சேர்ந்து ஒருவன் இயங்குவதும் சரியான விடயமாகும்.

கட்சி என்பது வெறுமனே ஒரு அரசியல் கழகமாகும், அது எமக்குத்தேவையான,ஊருக்குத்தேவையான,சமூகத்திற்க்கு தேவையான விடயங்களை சரியாக இனங்கண்டு சரியாக செய்கின்ற கழகம். இந்த அரசியல் கழகம் இதனை சரிவர செய்யவில்லை என்றால் அந்த அரசியல் கழகத்தை மறுபரிசீலனை செய்கின்ற கடப்பாடு எமக்கு உண்டு. கண்மூடித்தனமாக அந்த இயக்கத்தை நாம் தொடர்ந்தும் ஆதரிப்பதனால் காலம் கடந்து போகுமே தவிர எந்த பிரயோசனமும் சமூகத்திற்கு கிடைக்காது என்பதனை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

சகோதரர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி சொன்னார் இந்தகல்முனையில் ஆகக்குறைந்தது போக்குவரத்து பிரயாணிகளுக்கு ஒரு கழிவறை கூட கிடையாது என்று, கல்முனையை மாநகரம் என்று சொல்கிறார்கள் ஆனால் அது மாநகரமும் இல்லை,நகரமும் இல்லை மாறாக அடிப்படை வசதிகளற்ற ஒரு பிரதேசமாகவே இதனை கண்டிக்கிறேன். ஏறாவூர்,வாழைச்சேனை, காத்தான்குடி இன்னும் பல தமிழ் கிராமங்களை கடந்து சென்றுள்ளேன் அவற்றிலெல்லாம் இந்த கல்முனை பின்தங்கிய, இன்னும் சொல்லப்போனால் இது ஒரு அழிந்து போன சாம்ராஜ்ஜியமாக காணப்படுகிறது என்பதனை இங்கு பதிய விரும்புகிறேன். எனக்கூறினார்.

இப்பொதுக் கூட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், லக்சல நிறுவனத்தின் தலைவர் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல், குருநாகல் மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ஷாபி, பொத்துவில் அமைப்பாளர் மஜீத், கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

By

Related Post