– எம்.எம்.மின்ஹாஜ் –
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.
இரு விமான சேவைகளின் கடன் மற்றும் நஷ்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாவார். தனது சுய நலனுக்காகவே அவர் குறித்த நிறுவனங்களை அரச மயப்படுத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மத்தள விமான நிலையத்தை நாம் ஒருபோதும் தனியார் மயமாக்க மாட்டோம். மே தினத்தை வெவ்வேறாக இரு பிரதான கட்சிகள் ஏற்பாடு செய்வதினால் தேசிய அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை. அது ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் அம்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.