எம்பிலிப்பிட்டியவில், 29 வயதான குடும்பஸ்தரொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று புதன்கிழமையுடன் (17) முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு, நாளை வெள்ளிக்கிழமை (19) வழங்கப்படும் என எம்பிலிப்பிட்டிய நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, நேற்று அறிவித்தார். அத்துடன், இப்படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமில் தர்மரத்னவை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது, படுகொலை செய்யப்பட்ட சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் மனைவியான சஷிகா நிஷாமனி முனசிங்கவும், நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதியன்று, எம்பிலிப்பிட்டிய பூப்புனித நீராட்டுவிழா உற்சவமொன்றின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலொன்றைத் தடுப்பதற்காகச் சென்றிருந்த பொலிஸார், அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதப்பட்டுப் பிரச்சினை அதிகரித்த போது, சுமித் பிரசன்ன என்பவர், மாடியிலிருந்து விழுந்து காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை, நீதிமன்றத்தில் நேற்றுக் கையளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தக் கொலையுடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சார்பில் நேற்று மன்றில் ஆஜரான சட்டத்தரணி, இந்தக் கொலையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்படவில்லை என்றும் சுமித் பிரசன்ன என்பவர், மது போதையில் மாடியிலிருந்து கீழே விழுந்தே உயிரிழந்தார் என்று மரண விசாரணை அறிக்கையில் இருக்குமாயின், அவரைப் பிணையில் விடுவிக்குமாறும் நீதவானைக் கோரினார். அத்துடன், தனது கட்சியாளர், சுமித் பிரசன்னவை மாடியிலிருந்து தள்ளியே கொலை செய்தார் என அறிக்கையில் இருக்குமாயின், தான் அவருக்குப் பிணை கோரப்போவதில்லை என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆனந்த ஹெட்டியாரச்சி கூறினார். அவரது பிணைக் கோரிக்கையை மறுத்த நீதவான், உதவி பொலிஸ் அத்தியட்சகரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை, மேற்படி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தனக்குப் பிணை வழங்குமாறு கோரி, தன்னுடைய சட்டத்தரணியூடாக எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை காரணமாக, எம்பிலிப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.