Breaking
Mon. Dec 23rd, 2024

நாம் என்றும் ஒற்றுமைப்பட்டவர்களாக இருப்போமானால், எங்களுடைய பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு இறைவன் வாய்ப்பினைத்தருவான் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

மீராவோடை றிழ்வான் பள்ளிவாயலுக்கு அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (19) இஷாத்தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில்,

ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள பள்ளிவாயல்கள் அந்தந்தப்பகுதிகளில் காணப்படும் அனைத்து விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும். இன்னும் நிறையப்பணிகள் எமது பிரதேசத்தில் செய்ய வேண்டியுள்ளது. எனவே, நீங்கள் எல்லோரும் கடந்த காலத்தில் மனஸ்தாபங்கள், குறைபாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் உள்ளத்தில் வைத்துக்கொண்டு வக்கிரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை எங்களுக்குள் கிடையாது.

நாங்கள் எல்லோரும் மரணிக்கப் பிறந்தவர்கள் என்றாவாது ஒரு நாள் நாங்கள் மரணித்தேயாக வேண்டும். நமதூரில் சொல்வார்கள் சினத்தில் அறுத்த மூக்கு சிரித்தும் ஒட்டாது என்று. சிறிய சிறிய நிகழ்வுகளுக்காக ஊரினுடைய தலைமைத்துவத்தை அல்லது பிரதேசத்தினுடைய தலைமைத்துவத்தை இல்லாமற்செய்ய வேண்டுமென்று சூழுரைத்துக் கொண்டு செயற்படுவது என்னைப் பொறுத்த வரையில் ஒரு இபாதத்தை இழந்ததாகத்தான் நான் அதைப்பார்க்கின்றேன்.

எனவே, என்னுடைய எதிர்பார்ப்பு இந்தப்பிரதேசத்தில் நல்லதோர் கல்வியாளர் சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பது தான். அத்தோடு, இழந்து போயுள்ள காணிகளை உங்களுக்கு மீட்டுத்தர வேண்டுமென்ற எண்ணம் தான் எனது அடிப்படையிலிருக்கின்றது.

எனவே, கடந்த காலங்களில் எம்மிடமிருந்த மனக்கசப்புக்களை மறப்போம். மன்னிப்போம் என்று நாம் இனி வரும் நாட்களில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நானும் என்னுடைய வாழ்வில் நிறைய மாற்றங்களைக்கொண்டு வந்துள்ளேன். அதே போன்று, ஒவ்வொருவருக்கும் கடமையிருக்கிறது. எமது பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரை தலைமைத்துவத்திற்கு கொண்டு வர வேண்டுமென்று.

அப்படிச்செய்தால் தான் நல்ல பக்குவமுள்ள அரசியல் தலைவர்கள் உருவாவார்கள். வெறுமனே பணத்திற்கும் அரிசிக்கும் சோரம் போகின்ற பிரதேசவாசிகளாக நாங்கள் இருப்போமானால், எத்தனை பள்ளிகளைக் கட்டித்திறந்து, எத்தனை தொழுகை தொழுதாலும் அதிலே பாரிய பிரச்சினைகள், சிக்கல்கள், பின்னடைவுகள் இருக்கும்.

ஒவ்வொரு காலகட்டம் வருகின்ற போது, எங்களிடத்தில் மாற்றம் வர வேண்டும். நாங்கள் இருபது வயதில் செய்கின்ற விடயத்தை முப்பத்தைந்து வயதில் செய்வதற்கு முயற்சிக்கக்கூடாது. முப்பத்தைந்து வயதில் செய்கின்ற செயற்பாடுகளை நாற்பத்தைந்து வயதில் செய்வதற்கு முயற்சிக்கக் கூடாது.

எங்களது வயது வளர வளர எங்களிடத்தில் மாற்றங்களும் நல்ல விழுமியங்கள், நல்ல சிந்தனைகள். நல்ல பக்குவமான பேச்சுக்கள் எங்களிடத்தில் வர வேண்டும். அப்படி வருவதென்பது தான் ஒரு இஸ்லாமியனுடைய இலட்சியங்களாகும். அந்த வகையிலேயே எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் முதலில் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்களும் அதனை மாற்றிக் கொள்கின்ற எண்ணத்தில் செயற்பட வேண்டும். அவ்வாறு நாங்கள் செயற்பட்டால் எங்களுடைய பிரதேசத்திலே இன்னும் செய்ய வேண்டிய நிறையப் பணிகள் இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியும் இந்தப்பிரதேசம் ஒரு விவசாயப்பிரதேசம் இந்த பிரதேச விவசாய சமூகத்திற்காக தனியான அலுவலகமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்கு நாங்கள் எடுத்திருக்கும் முழு முயற்சிக்கு எவ்வளவு தடைகளும், பிரச்சினைகளும் வந்திருக்கின்றதென்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

நீங்கள் இவ்விடயத்தை பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதை இந்த அரசியல் தலைவனுக்கு இலேசாக்கிக் கொடுக்க வேண்டும். நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வாறான பிரச்சினைகள் சமூகக் குரோதச்செயல்களோடு பார்க்கின்றவர்கள் அல்லது வெறுமனே இனத்துவேசத்தைப் பேசுகிறவர்கள் இவர்களிடத்திலேயே இந்தத் தேவைகளை நாங்கள் முடிக்க வேண்டுமாகவிருந்தால், எங்களுக்கு உங்களுடைய பிரார்த்தனைகள் அவசியம். உங்களது பிரார்த்தனைகள் எங்களைப் பாதுகாக்கிறது. வாழ வைக்கிறது. சிந்திக்க வைக்கிறது. என்னை அதிகதிகம் முன்னோக்கிச் செல்வதெற்கெல்லாம் உங்களுடைய பிரார்த்தனைகள் என்றென்றும் தேவைப்படுகிறது.

எனவே, எதிர்காலத்தில் இந்தப்பிரதேசத்தில் செய்யவிருக்கும் அபிவிருத்திகள், அதனால் வரவுள்ள சவால்களை எனக்கு இலகுபடுத்தித் தருவதற்காக உங்களுடைய பிரார்த்தனைகளில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத்தலைவரும் அமைச்சரின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஈ.எல்.மஹ்ரூப், எம்.எல்.கலீல் ஆசிரியர் மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர் பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post