மஹிந்த சிந்தனையின் முன் நோக்கு திட்டத்திற்கமைய செயற்பட கூடிய அதிகாரிகளுடன் இணைந்து கடந்த மாகாண சபையில் செயற்பட்ட விதத்தை விட பன்மடங்காக செயற்பட்டு ஊவா மாகாணத்தை எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் நாட்டின் சிறந்த மாகாணமாக மாற்றியமைப்போம் என மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபையின் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்;
அரச இயந்திரமும் அரசியல்வாதிகளும் ஒரு வண்டியின் இரு சக்கரம் போன்று அவை சரியாக செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட முடியாவிடின் மக்களே பாதிக்கப்படுவர். நாம் வாக்கு கேட்க மக்கள் மத்திக்குச் சென்ற போது அதிகாரிகள் செயற்பட்ட விதம் எமக்குத் தெரிய வந்தது.
நான் 14 வருடங்கள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக இருந்து அதிகாரிகளுடன் கூடுதலாக செயற்பட்டவன் என்ற அடிப்படையில் எனக்கு நல்ல அனுபவமுள்ளது. அதிகாரிகளுடன் செயற்படக்கூடிய திறன் எனக்குள்ளது.
ஆகையால் எதிர்காலத்தில் மக்களுக்கு கடந்த மாகாண சபையில் செயற்பட்ட விதத்தை விட 2 மடங்காக செயற்பட வேண்டும். அதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற கூடியதாக இருக்கும்.
இந்தப் பயணத்தில் எம்முடன் சேர்ந்து பயணம் செய்ய முடியாதவர்கள் இங்கு இருந்து தமக்குப் பொருத்தமான இடமொன்றுக்கு சென்று விட முடியும். எமக்கும் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களே தேவை.
இங்குள்ள 19 உறுப்பினர்களும் முதலமைச்சர்களே. ஆகையினால் அவர்களின் தேவைகளை உணர்ந்து செயற்பட வேண்டும். மேலும் நாம் எடுக்கும் முடிவுகள் ஊவா மாகாண மக்களுக்கு நல்லதாக அமைய வேண்டும்.
எனவே, ஊவா மாகாணத்தை எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் நாட்டின் சிறந்த மாகாணமாக மாற்றி அமைப்போம் என்றார்.