நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் ஆயுள் முழுமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பாலித, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து உண்மையான தகவல்களை அறிந்தவர் அமைச்சர் சரத் பொன்சேகா என்ற வகையில் அவரது உரையை கூட்டு எதிர்க்கட்சியினர் செவிமடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, ரவுடிகள் போன்று நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொண்டார்கள்.
அன்றைய தினம் கெட்ட வார்த்தைகளால் திட்டிய, ரவுடித்தனமாக நடந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியினர் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள். அதனை தடுக்க முயன்ற எனக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் சவால் விடுக்கின்றேன். நாடாளுமன்றத்தின் கௌரவம் இவ்வாறானவர்களிடமிருந்து பாதுகாக்கப்படுமாயின் ஒருவாரம் அல்ல, ஆயுள் முழுமைக்கும் நாடாளுமன்றத்திற்கே வராமல் இருக்கவும் நான் தயார் என்றும் பாலித தெவரப்பெரும தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.