ஏ.எஸ்.எம்.ஜாவித்
1990ம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு துறைகளிலும் நாடளாவிய ரீதியில் புகழ் பூத்த இக்கல்லூரியானது 1990ம் ஆண்டு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர் இப்பாடசாலை பல பின்னடைவுகளைச் சந்தித்தது. இருந்தும், ஊர் பிரமுகர்களின் விடா முயற்சியால் 2011ம் ஆண்டு விஞ்ஞான, கணித, வர்த்தகப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டது. 2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஒரு மருத்துவப் பீடம் உட்பட 10 பேர் விஞ்ஞானப் பிரிவிலும், ஒரு பொறியியல் பீடம் உட்பட 6 பேர் கணித பிரிவிலும் ஒருவர் வர்த்தகத் துறையிலும் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மன்னார் மாவட்ட பாடசாலைகளின் 2014ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி விஞ்ஞானப் பிரிவில் 1ம் இடத்தையும் கணித பிரிவில் 2ம் இடத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய காலத்தில் இந்நிலையை அடைவதற்கு ஒத்தாசையாக இருந்த ஊர் பிரமுகர்களுக்கும் பாடசாலையின் முன்னாள் அதிபர், தற்போதைய அதிபர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் இப்பெறுபேற்றைப் பெற்றுத் தந்த மாணவ மாணவிகளுக்கும் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிப்பதோடு, இப்பெறுபேற்றை பெற்றுத் தந்து ஊரையும் பாடசாலையையும் நாடளாவிய ரீதியில் மீண்டும் புகழ் பெறச் செய்த மாணவ மாணவிகளுக்கும் இதற்கு உதவிகள் வழங்கிய அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள் அனைவருக்கும் பாராட்டு விழா ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடும் முன்னெடுக்கப்படுகின்றது. அத்தோடு இப்பாடசாலையின் பெயரையும் புகழையும் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்கு அக்கறை உள்ளவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் கல்வி பொதுத் தராதர விஞ்ஞானப் பிரிவிற்கும், கணித பிரிவிற்கும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிநுட்பப் பிரிவிற்கும் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதோடு ஏனைய மாணவர்களையும் இப்பாடசாலையில் சேர்வதற்கு ஊக்கமளிக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
தொடர்ந்தும் இப்பாடசாலையை முன்னேற்றுவதற்கு சகலரினதும் ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறது எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும், பழைய மாணவர் சங்கத்தின் மன்னார் கிளையும்;.