எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார செயற்பாடுகள் யாவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் இறுதிக் கட்ட பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் குருணாகல் மாவட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி பிரசாரக் கூட்டம் கொழும்பு மருதானையிலும் நடைபெறவுள்ளன.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் தமது இறுதிக் கட்ட பிரசார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் சுயேச்சைக் குழுக்களும் பிரசாரப் பணிகளை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றன.
குருணாகலில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமானது அதன் வேட்பாளர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இது இவ்வாறு இருக்க பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுவருகின்ற நிலையில் கடந்த சனிக்கிழமை வரை இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் விசேட விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
இன்று 10 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்குச் சீட்டுக்களும் விநியோகித்து முடிக்கப்படவுள்ளன. காரணம் தேர்தல் வாக்களிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வாக்காளர்களுக்கு வாக்களிப்பு அட்டைகளை விநியோகித்து விடவேண்டியது அவசியமாகும்.
எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால், உப தபால் நிலையங்களுக்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதும் 12021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.
17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பாக 6151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
மேலும் தேர்தல் செயற்பாடுகளுக்காக சுமார் இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்களிப்பு நடவடிக்கைகளில் 125000 அரச ஊழியர்களும் வாக்கு எண்ணும் செயற்பாடுகளில் 75000 அரச ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன் பாதுகாப்பு கடமை யில் சுமார் 25000 பொலிஸார் ஈடுபடவுள்ளனர். ஒரு வாக்களிப்பு நிலையத்துக்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வீதம் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
அத்துடன் நடமாடும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.