நல்லாட்சியை உருவாக்குவதில் மும்முரமாகச் செயற்பட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எல்லை மீள் நிர்ணயத்தில் கூட அநியாயம் இழைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூல விவாததில் அமைச்சர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,
நான் மிகவும் மன வேதனையுடன் இச்சபையில் உரையாற்றுகின்றேன்.
மீள எல்லை நிர்ணயத்திற்கான குழுவை அமைச்சர் பைசர் முஸ்தபா அமைத்த போது இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமென நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அதன் பின்னர் அமைச்சரவையில் உப குழு ஒன்றை அமைக்குமாறு நாங்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க அமைச்சரின் தலைமையில் பல கூட்டங்களில் பங்கேற்றோம்.
எனினும் மக்களின் கோரிக்கைகளும் அவர்களின் பிரதிநிதிகளின் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளமுடியாத பல முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இது சிறுபான்மை சமூகத்திற்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் சிறுபான்மை மக்களாலும், தமிழ், முஸ்லிம் மலையகத் தமிழர்கள் பாராளுமன்றத்திலோ, மாகாணசபையிலோ பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாது. இந்த நாடு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து நிம்மதியிழந்து தவிக்கின்றது. இந்த நாட்டிலே பொருளாதாரம் சீரழிந்து ஓர் இனம் இன்னோர் இனத்துக்கெதிராக போராடி நாடு நலிவடைந்திருக்கின்றது.
நல்லாட்சியை உருவாக்குவதில் சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம் மக்கள் பாடுபட்டு ஜனாதிபதி மைத்திரியையும், பிரதமர் ரணிலையும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக வாக்களித்திருக்கின்றார்கள். கடந்த ஆட்சியில் ஞானசார தேரரின் அட்டகாசங்கள் இனி தொடராது என நம்பினார்கள். பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படுமென நம்பினார்கள். அது மாத்திரமன்றி எல்லோருக்கும் சமனான உரிமைகள் கிடைக்குமென்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்தமாக சிறுபான்மை சமூகம் வாக்களித்தது. அவ்வாறான நிலையில், மொனராகலை, அநுராதபுரம் போன்ற சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில் ஓர் உள்ளூராட்சிப் பிரதிநிதித்துவத்தையேனும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை இந்தத் திருத்தச் சட்ட மூலம் தடுக்குமாக இருந்தால் அது எந்த வகையில் நியாயம்? இவ்வாறான பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் வேண்டினோம்.
சட்டத்திலிருக்கும் நியாயத்தின் பிரகாரம் எங்களுக்கு நீதி பெற்றுத்தர முடியாதென அமைச்சர் பைஸர் முஸ்தபா எங்களிடம் தெரிவித்தார். இன்று காலை (24) பிரதமரைச் சந்தித்து இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதெனவும், அதற்கு எங்கள் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தேன்.
இந்த நாட்டிலே சமாதானம் நீடிக்க வேண்டுமென்பதிலும், நாடு பிளவு படக்கூடாதென்பதிலும் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள். அதனாலேயே வடக்கிலிருந்து ஒரு இலட்சம் முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்டனர். அவ்வாறான அகதிச் சமூகம் வாழும் இடங்களில் குறிப்பாக முசலிப் பிரதேசத்தின் 2012 ஆம் ஆண்டின் அடிப்படையில் அங்குள்ள இடங்களான கொக்குப்படையான், கொண்டச்சி, முள்ளிக்குளம், கரடிக்குளி ஆகிய இடங்களை ஒன்றிணைத்து சிறுமைப்படுத்தி ஒரு பிரதிநித்துவத்தை உருவாக்கியுள்ளார்கள். அதே போன்று வேப்பங்குளம் பாலைக்குளி போன்ற இடங்களிலும் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பல இடங்களில் இவ்வாறு அநியாயங்கள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் இந்த உயர் சபையில் தெரிவித்தார். இவ்வாறு இன ரீதியாக, மத ரீதியாக சந்தேகங்களை உருவாக்கக் கூடிய வகையில் இந்த பிரிப்புக்கள் அமைந்துள்ளன. இன்று காலை இது தொடர்பிலே நான் பிரதமரிடம் சொன்னேன். அதன் பிறகு அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் பிரதமரைச் சந்தித்தனர். அதே போன்று உள்ளூராட்சி சபைகளை உருவாக்க வேண்டிய திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, கற்பிட்டி போன்ற இடங்களிலும் புதிய உள்ளூராட்சி சபைகளை அமைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அந்த விடயங்களை நிராகரித்து ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் புதிய உள்ளூராட்சி சபையை வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிந்தோம். புதிய உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கு அமைச்சருக்கு இருக்கும் அதிகாரங்களை செயற்படுத்துவதற்குக் கூட அவருக்குத் தடை விதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் நாங்கள் அறிகின்றோம். இது தொடர்பிலும் பிரதமரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் எதிர்வரும் உள்ளூராட்சித்தேர்தலுக்கு முன்னர் இவைகளை அமைப்பதற்கான உறுதிமொழியைத் தாருங்கள் என்றும் வேண்டினோம்.
இந்தத் திருத்தச் சட்டமூலம் நிறை வேற்றப்பட்டாலும் அமைச்சரவைக்கு ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்து எங்களுக்கு நியாயம் பெற்றுத்தருமாறு பிரதமரிடம் நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் பைசர் முஸ்தபாவையும் பிரதமர் அழைத்து இதற்கான உறுதி மொழியைத் தந்துள்ளார். இது செயற்படுத்தப்பட்டாலேயே நாங்கள் ஆதரவாக வாக்களிக்க முடியும். இல்லையேல் எமது மனச்சாட்சி இடம் கொடுக்காது தேவையேற்படின் பதவிகளை துறந்தாவது போராடுவோம்.
சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சிசபையொன்றை அமைத்துத் தருவதாக கடந்த தேர்தல் காலத்தில் பிரதமர் அந்த பிரதேசத்திற்குச் சென்றிருந்த போது வாக்களித்திருந்தார். இது தொடர்பில் தற்போது இடம்பெறும் செயற்பாடுகள் கல்முனை, சாய்ந்தமருது மக்களிடையே ஒரு கலவரத்தை உருவாக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது. அண்மையில் கல்முனை மக்கள் என்னை சந்தித்த போது ஏற்கனவே இருந்தது போன்று கல்முனையை நான்காக பிரிக்குமாறு கோருகின்றனர். கல்முனை, சாய்ந்தமருது மக்களிடம் நாங்கள் அன்பாக வேண்டிக்கொள்வது உங்களுக்குள் பிரிந்திவிடாது ஒற்றுமையாக செயற்படுங்கள். பிரதமர் எங்களுக்கு வாக்குத் தந்திருக்கின்றார். அவரிடம் நியாயத்தை சொல்லி யாருக்கும் அநியாயம் இடம்பெறாது இந்த விடயத்தில் தீர்வு காண்போம். அமைச்சர் பைசர் முஸ்தபா மிகவும் நேர்மையானவர். அவர் நியாயமாகச் செயற்படுவார். அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தச் சட்ட மூலத்துடன் விரைவில் மீள்நிர்ணய சட்டமூலத்தை கொண்டுவந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுகொடுப்பார் எனவும் நம்புகின்றோம். அத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என அமைச்சர் தெரிவித்தார்.
- ஊடகப்பிரிவு