எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் நாளை (இன்று) வியாழக்கிழமை சபையில் தெளிவுபடுத்தப்படுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்தார்.
எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக ஜே.வி.பி. எம்.பி.யும் எதிர்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர திஸாநாயக எழுப்பிய கேள்விக்கு நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதிலில் மேலும் தெரிவிக்கையில்,
எவன் கார்ட் மிதக்கும் ஆயதக் களஞ்சியம் தொடர்பிலான விசாரணைகள் குறிதது சொலிசிட்டர் ஜெனரலுக்கும் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்தன.
இதற்கமையவே சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை வெளியிட்டார். எனவே இவ் விடயம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார். இதன்போது குறுக்கிட்ட அநுர திஸாநாயக எம்.பி. எவன் கார்ட் பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.அதோடு இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றார்.
இதன் பின்னர் பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
எவன் கார்ட் பிரச்சினை தொடர்பில் மேலதிக விபரங்கள் நாளை (இன்று) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தப்படும் என்றார்.இந் நிலையில் எழுந்த மனுஷ நாணயக்கார எம்.பி. தான் காலியை சேர்ந்தவ என்றும் தனக்கு -காலி மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக கருத்து தெரிவிக்க இடமளிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இதன்போது சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு பிரதமர் குறுக்கிட்டு அநுர திஸாநாயக எம்.பி. கேள்வி கேட்டதால் நான் அதற்கு பதில் வழங்கினேன்.இனி காலியை சேர்ந்தவருக்கு இடமளிக்க முடியாது. அப்படி சந்தர்ப்பம் வழங்கப் போனால் நைஜீரியாவிலிருந்தும் இங்கு வருவார்கள் என்றார்.
இந்நிலையில் எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் மேலும் தனது பதிலில் குறிப்பிடுகையில்,
மிதக்கும் ஆயுதக் கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். 2012.09.18 ஆம் திகதி அதற்கான கடிதம் எவன்கார்ட் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆயுதக் களஞ்சியம் காலி துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் பாதுகாப்பு அமைச்சில் இல்லை. இதிலுள்ள ஆயுதங்களுக்காக இலங்கை அரசு எந்தவிதமான அனுமதிப் பத்திரமும் வழங்கவில்லை.
2015 ஜனவரி 18ஆம் திகதி வரையில் இக் களஞ்சியம் தொடர்பாக பொலிஸார் அறிந்திருக்கவில்லை. கப்பலில் உள்ள ஆயுத விநியோகத்திற்கு பாதுகாப்பு அமைச்சு எவ்வித அனுமதியும் வழங்கியிருக்கவில்லை.
தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அறிக்கை கிடைத்தவுடன் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர் தலையிடவில்லை என்றார்.