“எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் கூறினார்.
நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில்
“நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மூன்று முறை இருந்து, உங்களுக்கு சேவையாற்றி வந்த நான், எனது சேவைகளைப் பரந்துபட மாவட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டுமென்ற அவாவிலும், மக்களது கோரிக்கையின் பேரிலும் பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.
ஒரு சிலர் முன்னெடுக்கும் நீலிக் கண்ணீர் பிரச்சாரங்களின்படி, ஊருக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதோ, அல்லது வெறும் பொம்மையாக அப்பதவியிலிருந்தோரை தோற்கடிப்பதோ எனது நோக்கமோ, இலக்கோ அல்ல.
அவ்வாறு எனக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் பொய்களும் கட்டுக்கதைகளும் உள்ளத்தைக் கொதிக்க வைத்தாலும், உண்மையின் பக்கம் மக்கள் திரள்வது கண்டு ஆறுதல் பெறுகின்றேன்.
அரசியல் வங்குரோத்து காரணமாகப் பிதற்றித்திரியும் சிலர், பாராளுமன்ற பிரதிநிதியாகவிருந்து 15 வருடங்கள் சாதித்தது என்ன வென்பதை, இன்று மக்கள் சீர்தூக்கிப் பார்த்தே எம் பக்கம் அணிதிரண்டுள்ளனர்.
சமூகத்திற்காக என்றும் துணிச்சலுடன் குரல் கொடுத்து, தன்னை அர்ப்பணித்து, பல்வேறு அபிவிருத்திப் பணிகளை எம்மக்களுக்காக முன்னெடுத்து வரும், சிறந்த தலைமைத்துவமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் எனது சேவைகளைத் தொடர்வேன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்றும் முஸ்லிம் மக்களுக்கான குரலாகவும், பாதுகாப்பு அரணாகவும் திகழ்வதே, எமக்கு மக்கள் பேராதரவு நல்கக் காரணமாகும்.
அன்று அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் பேரின மனநிலை கொண்ட இன வெறியர்களால் தாக்குதல்களுக்குள்ளான போது, முதலில் நேரடியாக அம்பாறைக்கு வந்து, அந்த அநீதிக்கு எதிராகக் கிளர்ந்து குரலெழுப்பியவர் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனே ஆவார்.
ஆகையால், எமது தலைமைத்துவத்தின் வழிகாட்டலில், நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், இந்த மாவட்ட மக்களுக்காக எதையெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்வேன். முஸ்லிம் மக்களின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்படவும் தயங்கேன்” என்று அவர் கூறினார்.