யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே எவ்வித அச்சமும் சந்தேகமு மின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைக ளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த உபவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரத்தினம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் எந்தவகையிலும் அண்மையில் இடம்பெற்றது போன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை மாணவர்களின் பாதுகாப்புக்கான முழுமையான பொறுப்பு அரசாங்கத்தை சாரும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதுதொடர்பாக கூடிய கரிசனையுடன் செயற்படுமாறு பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களின் பாதுகாப்புக்காக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பதற்கும் இந்த சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டது.
சந்திப்பில் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.