Breaking
Sun. Dec 22nd, 2024

மிகவும் சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேல் கல்வியிலும் ஏனைய முக்கிய துறைகளிலும் உச்ச நிலையில் இருப்பதனாலேயே பலம் பொருந்திய, வளம் நிறைந்த முஸ்லிம் நாடுகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் அல்காசிமி கிராமத்தில் நடைபெற்றுவரும் மக்தப் பிர்தௌஸ் வகுப்பின் இரண்டு வருடப்பூர்த்தி நிகழ்வு, அதிபர் நவாசிர் (ரஷீதி) தலைமையில் இன்று (03/ 12/ 2017) அல் காசிமி ஜும்ஆ பள்ளி வளாகத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாகப் பங்கேற்று அமைச்சர் உரையாற்றினார்.

மக்தப் பிர்தௌஸ் நிர்வாகக்குழு மற்றும் இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றிய (ISDA) அமைப்பு இணைந்து நடாத்திய இந்நிகழ்வில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் உட்பட உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கூறியதாவது,

உலகிலே ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவற்றில் 55 நாடுகளுக்கு மேற்பட்டவை முஸ்லிம் நாடுகள். இந்த நாடுகளிலே பிளவுகளையும், பிரச்சினைகளையும் உருவாக்கி, அவற்றில் குளிர்காய ஏகாதிபத்தியவாதிகள் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு, அவற்றில் வெற்றியும் பெற்று வருகின்றனர். அண்மையில், பலம் பொருந்திய 05 அரபு நாடுகளின் கூட்டமைப்புக்குள்ளேயே குத்து வெட்டுக்களை ஏற்படுத்தி, பிரச்சினைகளையும், பிளவுகளையும் ஒருவரோடு ஒருவர் எதிரிகளாக செயற்படும் நிலையையும் திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர்.

பாதுகாப்பான நாடுகளாகவும், முஸ்லிம்கள் மீது கருணை காட்டும் நாடுகளாகவும் செயற்பட்ட இந்த நாடுகளுக்கிடையே, பிரச்சினைகளை உருவாக்கியதன் தாக்கத்தை நாம் உணர்கின்றோம். அது மட்டுமின்றி, சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளும், சியோனிசவாதிகளும் ஊடுருவி, பெரும்பான்மையின இனவாதிகளைத் தூண்டி சிறுபான்மை மக்களை அவஸ்தைக்குள்ளாக்கும் நிலைமை இன்று தலைவிரித்தாடுகின்றது.

நமது சமூகம் இயற்கை அனர்த்தத்தினாலோ வேறு துன்பங்களினாலோ பாதிக்கப்படும் போது, பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வந்த முஸ்லிம் நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பது நமக்குக் கவலையளிக்கின்றது.

நமது நாட்டிலே முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவற்றை தட்டிக்கேட்பதையும், ஏனைய பிழைகள் தொடர்பில் சுட்டிக்காட்டுவதையும், சமூகத்துக்காகக் குரல் கொடுப்பதையும் பேரினவாதிகள் பிழையான கண்ணோட்டத்தில் நோக்கி, எம்மை இனவாதிகளாக முத்திரை குத்துகின்றனர். இவ்வாறான சவால்களுக்கும், சமூகத்துக்கெதிரான பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவதற்குச் சிறந்த ஆயுதமாக இருப்பது, நாம் கல்வியில் முன்னேறுவது மட்டுமே.

மார்க்கக் கல்வியையும், உலகாயக கல்வியையும் நாம் இணைந்த வகையில் சமாந்திரமாகாவும், சமானமாகவும் கற்றல் வேண்டும். பணம், பதவி, பட்டங்கள் மட்டும் இருந்து மார்க்கக் கல்வி இல்லாவிடில், நமது வாழ்வு முழுமையாகாது.

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா நாடளாவிய ரீதியில் மக்தபின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி, மாணவர்களுக்குச் சீரான மார்க்கக் கல்வியை வழங்குகின்றது. இவ்வாறான முறைமை நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது, எங்களுக்கு கிடைக்கவில்லை. பல்வேறு கஷ்டங்கள், வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலே அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் இந்தப் பணி பாராட்டத்தக்கது.

நமது சமூகத்தில் உலமாக்கள் ஒன்றுபட்டு அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைமையிலும் வழிகாட்டலிலும் செயற்படுகின்றனர், வேற்றுமைக்குள் ஒற்றுமை கண்டு, கருத்து வேறுபாடுகளுக்கு மஷூராவின் அடிப்படையில் தீர்வு பெற்று ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தும், ஓர் உயரிய சபையாக விளங்கும் ஜம்இயாவின் சிந்தனையில் உதித்த இந்த மக்தப் திட்டம், வெற்றி பெற்று வருவதை நான் நன்கறிவேன். எனவே, இந்த திட்டத்துக்கு பல்வேறு வழிகளிலும் உதவும் அனைவருக்கும் இறைவன் நற்கூலி வழங்குவான்.

பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட புத்தளம் அல்காசிமி கிராமம், இன்று குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோன்று இங்குள்ள பாடசாலையும் சிறந்த அடைவைக் கண்டுள்ளது. கிராமத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்புச் செய்தவர்களுக்கு எனது பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

 

 

Related Post