Breaking
Fri. Jan 10th, 2025
கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்

இப்போதெல்லாம் நாட்டில் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களுக்கு வெளிநாட்டுக்கு ஒருமுறையாவது தொழிலுக்கு சென்று விடவேண்டும். படிப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை என சொல்லும் காரணம் இன்னொருப்பக்கம் இருக்க வெளிநாட்டின் அக்கரை பச்சைக்கு மயங்கி செல்லும் வாலிபர்களே அதிகம் எனலாம்.

அவ்வாறாக செல்லும் வாலிபர்களே கொஞ்சம் நிதானமாக முடிவெடுங்கள். “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை என்பதை அடுத்தவர் சொல்லும் போது விளங்குவதில்லை. தான் அங்கு சென்று அதன் வடிவத்தை கண்ணால் கண்டுக்கொண்டே பின்னேதான் நமது ஊர் பச்சை என தெரியும்.

அவசரத்தால் எதையும் சாதித்து விட முடியாது, பதறுகின்ற காரியம் சிதறித்தான் போகும் என முன்னோர்கள் சொன்னது ஒன்றும் விளையாட்டுக்கல்ல. வெளிநாட்டுக்கு செல்ல ஆயத்தமாகும் கல்வித்தகைமை உள்ளவர்கள் அவர்கள் இந்த வெளிநாட்டு முகவர்களின் வலையில் பெரும்பாலும் சிக்குவதில்லை.

அதேநேரம் கல்வித்தகைமை இல்லாதவர்களே இந்த ஏமாற்றும் வெளிநாட்டு முகவர்களின் சதி வலையில் சிக்குகின்றனர். வெளிநாட்டுக்கு சென்றால் போதும் நான் ராஜாத்தான் என்ற எண்ணத்தில் நகைகளை விற்று, சிலபோது வட்டிக்கு அடகுவைத்து, கடன்பட்டு முகவர்களின் கையில் பணத்தை தொலைக்கின்றனர்.

வெறுமனே சுத்திகரிப்பு தொழிலாளர்களாகவும், வேலைத்தளத்தில் உதவி செய்யும் தொழிலாளர்களாகவும் என குறைந்த சம்பளத்திற்கு “அடிமாட்டு விலை” இவ்வளவு பிரயத்தனம் செய்து வருவதை காட்டிலும் உள்ளூரில் நிம்மதியாக வேலை செய்து வாழ்ந்துவிடலாம்.

ஒரு கம்பனி தனக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் தேவையாயின் இவ்வாறன முகவர்களை நாடும். இவ்வாறன போது விசா முதற்கொண்டு நாட்டிலிருந்து வருவதற்கான விமான டிக்கட் வரை இலவசமாக வழங்கும். இந்நிலையில் முகவர்கள் தொழிற்சந்தையில் நிலவும் அதிகூடிய கேள்வியை முன்னிறுத்தி அவைகளை விலைக்கு விற்கின்றது.

விலைக்கு விற்பது முக்கியமன்று. விலையினை அதிகப்படுத்துவது மட்டுமல்லாது தமது வயிற்றை நிரப்புவதற்காக பொய் வாக்குறுதிகளை வழங்கி அவர்களிடம் இருந்து பணத்தினை பறிக்கின்றது, கொள்ளையடிக்கிறார்கள்.

ஏழ்மையின் கொடூரம், படிப்பறிவு இன்மையின் விபரீதம் இதில் எமாறுகின்றது. விளைவு அரபு நாட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் அவன் அடிமாடாகின்றான். முகவர்கள் சொல்லும் ஒரு வேலை, இவனோ அங்கு இன்னொரு வேலைக்கு பணியமர்த்தப்படுகின்றான்.

முகவர்களோ தமது வயிற்ரை நிரப்பிக்கொண்டு சந்தோசமாக அங்கு வாழ, பணத்தை தொலைத்த இவனோ அறைவயிரும் குறைவயிருமாய் இங்கு நிம்மதி இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றான். இவைகள் யதார்த்த பூர்வமான உண்மை.

சில நபர்களுக்கு எப்படி சொன்னாலும், எப்படி எழுதினாலும் புரியாது, துன்பப்பட்டால் தான் அனுபவம் வரும். இது மனித இயல்வு. வெளிநாடு ஆசை எல்லோருக்கும் வருவதுதான், ஆசை வந்துவிட்டது என்பதற்காக அவசரப்படாது வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்களிடம் அனுபவங்களை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

பணத்தினை முகவர்களுடன் ஒப்படைக்கும் முன் அது பற்றி தீர விசாரித்துக்கொள்ளுங்கள். அதன் நம்பகத்தன்மை எவ்வாறு உள்ளது, அதன் உண்மை எப்படியானது என விசாரியுங்கள். உங்கள் நலன் உங்களுக்கு முக்கியமென்றால் நீங்கள் வேலைத்தளத்தில் இறங்க முன் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

பணம் சம்பாதிப்பதற்காக எத்தனை எத்தனையோ மழையில் முளைக்கும் காளான்கள் போல போலி முகவர் நிலையங்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறது. போலியை கண்டு ஏமாந்தீர்கள் எனின் நீங்கள் காலித்தான் என்பதை மறவாதீர்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவசரமும், கவனக்குறைவும் இவ்விடயத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு முகவர்கள் – போலித்தன்மை – உங்கள்நலம் பேணிக்கொள்ளுங்கள்..

Related Post