Breaking
Fri. Nov 22nd, 2024

ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு அதில் இருந்த முக்கிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை விமானிகள் செயல் இழக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்தனர். அதில் 70 பேரின் உடல்கள் தான் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்பு பெட்டிகள் உள்ளிட்ட சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விமான பாகங்களை தேடும் பணியை இந்தோனேசிய ராணுவம் நிறுத்திவிட்டது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தும் குழுவின் தலைவர் மார்ட்ஜோனோ சிஸ்வோஸுவர்னோ கூறுகையில், விமானத்தின் கருப்பு பெட்டி அதாவது டேட்டா ரெக்கார்டரில் பதிவானவற்றில் இருந்து விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. ஆனால் அது குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது.

விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு பாதுகாப்பான உயரத்தில் பறந்துள்ளது. ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளானபோது அதை துணை விமானி தான் இயக்கினார். கேப்டன் அதை மேற்பார்வையிட்டார். விமானத்தை எடுக்கையில் அது நல்ல நிலையில் இருந்துள்ளது. சிப்பந்திகள் அனைவரும் அனுபவசாலிகள் என்றார். விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு அதில் இருந்த முக்கிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை விமானிகள் செயல் இழக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் விமானி அறையில் இருந்த சர்க்யூட் பிரேக்கரை அறுத்துவிட்டுள்ளனர். விமானம் 30 நொடிக்குள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடி உயரத்தில் ஏறியுள்ளது. விமான விபத்து பற்றிய இறுதி விசாரணை அறிக்கையை சமர்பிக்க 6 முதல் 7 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

Related Post