பாத்திமா ஷா்மிலா
மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை 12.06.2015 பகல் 1.30 மணிக்கு இந்தக் கையெழுத்துச் சேகரிப்பு நாடெங்கிலும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகை பிரசங்கத்தை நிகழ்த்திய ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.டபிள்யூ.எம். ஹாரிஸ் கால்நூற்றாண்டு கடந்தும் அகதிகளாக இருக்கும் முஸ்லிம்களின் துயரத்தையும் அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவேண்டியதையும் வலியுறுத்தினார்.
இந்தக் கையெழுத்துக் கோரிக்கைகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உள்ளிட்ட பல அரச தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்தக் கையெழுத்துச் சேகரிப்பை கடந்த ஏழாம் திகதி மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்திலிருந்து ஆரம்பித்து வைத்திருந்தார்.