அமெரிக்காவின் முன்னாள் அதிபராக 2001-2009 ஆண்டுகளுக்கிடையே இருமுறை பதவி வகித்தவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்(69). 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சி தோல்வி அடைந்து, ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
இதைதொடர்ந்து, பதவி விலகிய ஜார்ஜ் புஷ், அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் விலகி இருந்தார். வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அதிபர் வேட்பாளராவதற்கு நடைபெற்ற ஆரம்பகட்ட வாக்கெடுப்பின்போது டொனால்ட் டிரம்ப்புடன் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பியான ஜெப் புஷ்ஷும் ஒரு வேட்பாளராக களம் இறங்கினார்.
பின்னர், நடைபெற்ற பிரச்சார கூட்டங்களின்போது போதிய ஆதரவு கிடைக்காததால் போட்டியில் இருந்து அவர் விலகி கொண்டார். இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தலுடன் அமெரிக்க பாராளுமன்றத்துக்கான பொது தேர்தலும் நடைபெறுகிறது.
அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் இருந்தும் தலா இரண்டு எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். தற்போதைய பாராளுமன்றத்தில் குடியரசு கட்சியின் பலம் 54 ஆகவும், ஜனநாயக கட்சியின் பலம் 46 ஆகவும் உள்ள நிலையில் இந்த தேர்தலில் மேலும் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் குடியரசு கட்சியினர் பிரச்சார வியூகத்தை அமைத்துள்ளனர்.
பிரச்சார செலவுகளுக்கு தேவையான நிதியை திரட்ட தங்கள் கட்சியை சேர்ந்த பிரபலங்களை தேடி அலையும் சில வேட்பாளர்கள் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வலை விரித்து வருகின்றனர்.
இப்போதெல்லாம், தங்களை ஆதரித்து நிதி திரட்டும் பிரச்சாரத்துக்கு உதவி செய்யும்படி ஏராளமான போன் அழைப்புகள் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வந்தவண்ணம் உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த அன்பு அழைப்புகளை ஏற்று விரைவில் தீவிர பிரச்சாரத்திலும், முழுநேர அரசியலிலும் ஜார்க் புஷ் குதிக்கக்கூடும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், தனது கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்-ஐ ஜார்ஜ் புஷ் வெளிப்படையாக ஆதரிக்க மாட்டார் என்றே கருதப்படுகிறது.