Breaking
Thu. Dec 26th, 2024

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஏழு இந்தியப் பிரஜைகளையும் தொடர்ந்தும் காவலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் வௌிநாட்டவர்களுக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள் 1075 தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் 650 குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விசாரணைகளை நிறைவு செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறும் அவர் கோரினார்.

எனினும், சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பது அநீதியானது என, நீதவான் கிஹான் பிலபிடிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, விளக்கமறியிலுள்ள ஏழ்வருக்கும் முறையாக வைத்திய வசதிகள் கிடைக்காத நிலை உள்ளதாக இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர், எனவே சந்தேகநபர்களை மிரிஹான விஷேட முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் அதற்கு அனுமதியளித்துள்ளதுள்ளார்.

அத்துடன், அந்த முகாமில் சந்தேகநபர்களுக்கு விஷேட பாதுகாப்பினைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட ஏழு இந்தியர்களையும் எதிர்வரும் 5ம் திகதி வரை காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

By

Related Post