ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது நிறைவாண்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக வருகை தரவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிறைவாண்டு விழா காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ் சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவும் அதேகட்சியிலேயே இருந்தார். எனினும் 1951 ஆம் ஆண்டு எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் 64 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரொருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவாண்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நிறைவாண்டு விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம், ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.