மக்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை வழங்கக் கூடிய புதிய அரசாங்கமொன்றை ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சி அமைக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சரும், வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனவரி 8ஆம் திகதி பெறப்பட்ட வெற்றியும் அதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நன்மைகளையும் வழங்கக் கூடிய புதிய அரசாங்கமொன்று இன்னும் இரண்டு வாரங்களில் உருவாகும். எனவே, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அனைத்து துறைகளுக்கும் சுதந்திரம் அவசியமாகும்.
முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் முஸ்லிம்கள் மீதான விரோத மனப்பான்மையினால்தான் அவர் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தற்காலிகமாக தணிந்துள்ளன. இருந்தாலும் எதிர்காலத்தில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கான நிலைமையும் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில இடங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்திலும் அம்பாறையில் மயில் சின்னத்தில் தனித்தும் போட்டியிடுகின்றது.
அம்பாறை மாவட்டம் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இதயம் போன்றது. இது முஸ்லிம் காங்கிரஸுக்கு தாய்வீடாகும். கடந்த முப்பது வருடமாக முஸ்லிம் கட்சி என்று சொல்லுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லை. முஸ்லிம்களுக்கு சரியான பாதையையோ தலைமைத்துவத்தையோ வழங்கவில்லை. இது ஒரு மிகவும் பரிதாபகரமான நிலையாகும்.
இந்த நாட்டில் சுமார் 23 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் சுமார் 13 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன. இந்த வாக்குகளை எமது உரிமைகள் தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.