Breaking
Fri. Nov 15th, 2024

ஏ.எச்.எம். பூமுதீன்

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அம்பாறை மாவட்டம் வழமை  போன்று சூடுபிடித்துள்ளது. கட்சியால் அதிகாரமளிக்கப்பட்டோர் தத்தமது கட்சி வேட்பாளர் தெரிவை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், மு.கா முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸனலி தேர்தல் கூட்டு வைத்து “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” எனும் பெயரில் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேச உள்ளுராட்சி சபைகளில் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளன.

கல்முனை மாநகர சபை – சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம் ஆகிய சபைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது கட்சி வேட்பாளர்களை களமிறக்கும். ஏனைய சபைகளுக்கு மக்கள் காங்கிரசும்,  ஹஸனலி தரப்பும் இணைந்து வேட்பாளர்களை களமிறக்கவுள்ளன.

கல்முனை மற்றும் இறக்காமம் பகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் மேயரும், கட்சியின் பிரதி தேசியமைப்பாளரும், அசோக் லேலண்ட் நிறுவனத்  தலைவருமான சிராஸ் மீராசாஹிபை, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் நியமனம் செய்துள்ளார்.

கல்முனை மாநகர சபைக்கு போட்டியிடும் வேற்பாளர் தேர்வு மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. முன்னாள் மேயர் சிராஸ், சாய்ந்தமருதை சேர்ந்தவர் என்பதால், அந்த ஊர் பள்ளிவாசலுக்கு கட்டுப்பட்டவராக , சாய்ந்தமருது தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அவரின் இந்த செயற்பாடு அந்த ஊர் மக்கள் மத்தியில் , சிராசுக்கு நற்பெயரை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

கல்முனை மற்றும் இறக்காமம் பகுதிகளின் பொறுப்பு சிராசுக்கு வழங்கப்பட்டுள்ளதால், இப்பகுதி இளைஞர்கள் அதிக ஆர்வம் கொண்டு கட்சி மற்றும் தேர்தல் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

கட்சி பணிகளில் எப்போதும் இளைஞர்களை முன்னிலைப்படுத்தும் பழக்கம் சிராசுக்கு உள்ளது என்பதால், அவரை நம்பி மு.கா இளைஞர்களும் அணிதிரள ஆரம்பித்துள்ளனர்.

இறக்காமம் பிரதேச சபைக்கான வேட்பாளர் தெரிவு நேற்று  நள்ளிரவு வரை சுமுகமாக இடம்பெற்று முடிந்துள்ளது. சிராஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெரிவில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆக மொத்தத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரசும், ஹஸனலி – ரிஷாத் கூட்டான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும், அம்பாறை மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்க கூடிய பெரும் வெற்றிகளை பெற்று 05 முஸ்லிம் சபைகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related Post