Breaking
Wed. Nov 20th, 2024

-ஊடகப்பிரிவு-

வன்னி, புத்தளம், அநுராதபுரம், கொழும்பு, மட்டு மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதானது, எமது ஆசனங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவென கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (09) இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பாக தமது மயில் சின்னத்தில் போட்டியிடுவதன் நோக்கமறியமால் சிலர் பேசுகின்றனர். இங்கு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்வதாலும், இந்த மக்களின் பலத்தால் ஏனைய மாவட்ட முஸ்லிம்கள் நன்மை அடைவதை உறுதிப்படுத்தும் வகையில் களம் இறங்கியுள்ளனர்.

அதேபோல், ஏனைய மாவட்டங்களில் ஜக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறக்கியுள்ளனர். காலத்தின் தேவையுணர்ந்து சேர்ந்து கேட்க வேண்டிய இடங்களில் சேர்ந்தும், பிரிந்து தனித்து கேட்கும் இடங்களில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  போட்டியிடுகின்றது.

துரதிஷ்டம் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தமது பிரதிநிதித்தவத்தை அடையாளப்படுத்தும் இடங்களில் தனித்துவத்தை இழந்து யாணையில் சரணாகதி அரசியல் செய்கின்றது.  என்ற உண்மையினை வெளிப்படுத்தும் போது அதனை ஒரு செய்தியாக  கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் இடங்களில் பிரசாரத்தின் உத்தியாக சில அரசியல்வாதிகள் மேற்கொள்ளுவதை பார்க்கின்றபோது என்ன சொல்வது என்று தெரியாதுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இன்னும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டமைப்புக்கு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெரும் வரவேற்பு மட்டுமல்ல, மக்கள் அணி திரண்டு இணைந்து வருகின்றனர். இந்த மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியினை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தனது மாவட்டத்தினை மறந்து, பிற மாவட்டங்களில் ஜக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டு சேர்ந்து  போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை குறைத்து மதிப்பிடுகின்றனர்.

கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பொறுத்த வரையில் கட்சிகளின் சின்னத்தை விடவும் மக்களின் நீண்டகால தேவைகள் தொடர்பில் பணியாற்றும் ஒரு தலைவர் என்ற அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர். இந்த அங்கீகாரம் தான் சமூகம் சார்ந்த விடயங்களைில் அவரின் துணிச்சலான வீரியமான செயற்பாடுகளுக்கு உரம் சேர்த்துள்ளது.

களுத்துறையினை பொறுத்தவரையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து களமிறங்கியிருப்பது என்பது, இந்த மக்களின் துன்பியல் சம்பவங்களின் போதெல்லாம் எமது கட்சியின் தலைமை செயற்பட்ட விதத்துக்கு வழங்கவுள்ள அங்கீகாரத்தை பிரகடனப்படுத்தவே என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளதுடன், அதனை வரவேற்கும் வகையில் மேற்கொண்டுவரும் பிரசாரங்களுக்கு நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

பெரும்பான்மை கட்சிகளை நாம் கருவேப்பிலையாகவே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அக்கட்சிகள் எம்மை கருவேப்பிலையாக பயன்படுத்திவிடுவார்கள். மக்களின் ஆணையினை கொண்டு நாம் அவர்களது தேவைகளை பெற்றுக்கொள்ள முயல வேண்டும். மாறாக அம்மக்களது வாக்குகளை பெற்று அவர்களுக்கு துரோகம் செய்யும் அரசியல் கபடத்தனத்தை எவர் செய்தாலும்  அவர்களுக்கு மக்களின் தீர்ப்பு உரிய நேரத்தில் கிடைக்கும் என்பதை நாம் மறந்து செயற்பட முடியாது.

இந்த நாட்டு முஸ்லிம்களின் தனிப் பெறும் சக்தி என்று கூறிக் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டிய நேரத்தில் அதனை விடுத்து, காலம் கழிந்த பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களால் சமூகம் பாதகமான சூழலையே சந்திக்க நேரிடும். அதனையே இன்றைய முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சி செய்கின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி என்ற இலக்கு நோக்கி பயணிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எங்கும் எந்தக் கட்சியுடனும் சேர்ந்து கேட்கும். ஆனால், ஒருபோதும் தனித்துவத்தை இழந்து அந்த கட்சிக்கு சோரம் போகாததுடன், பணம் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை வாங்கவும் முடியாது என்றும் இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இங்கு குறிப்பிட்டார்.

 

Related Post