நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 05 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அபாய நிலைமை காணப்படுவதாக நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த மாவட்டங்களில் நேற்று மாலை விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்று மாலை வரை அமுலில் இருக்குமெனவும், அதனை நீடிப்பது அல்லது நீக்குவது தொடர்பில் மாலை தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒருவார காலம் தொடர்ச்சியாக மழை பெய்தமையினால், கொஸ்லாந்தை – மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாகவும், அதுதொடர்பில் ஏற்கனவே அந்தப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்ததாகவும் அவர் கூறினார்.
அவ்வாறான பகுதியகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தியிருந்ததாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, தாமதிக்காது அவ்வாறான பகுதியில் வாழும் மக்களை வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளதாக நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கூறினார்.
அத்துடன், மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்களை, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு ஆர்.எம்.எஸ்.பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, பதுளை உட்பட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.