Breaking
Sat. Nov 16th, 2024

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறித்த பிரதேசங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதோடு, நிலச்சரிவு ஏற்படும் சாத்தியமும் உள்ளதாக ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தின் சில பகுதிகளில் 80 முதல் 110 மி.மீ வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார்.

பசறை, வெலிமடை, ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அனர்த்தம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, மக்களை விழிப்புடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By

Related Post